

இன்சூரன்ஸ் விஷயத்தில் புகார் செய்வது, தகவல்களைப் பகிர்வது, லிங்க்குகளை கிளிக் செய்வது போன்றவற்றில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் எச்சரிக்கை செய்துள்ளது.
இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) வெளியிட்டுள்ள இந்த எச்சரிக்கை மிகவும் முக்கியமானது மற்றும் தற்காலத்தில் அனைவரும் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.
சமீபகாலமாக காப்பீடு விஷயத்தில் போலியான வெப்சைட் மற்றும் லிங்க்குகளை உருவாக்கி மக்களை ஏமாற்றும் மோசடிகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் ( IRDAI ) தனது அதிகாரப்பூர்வ காப்பீட்டு குறைதீர்ப்பு தளமான 'Bima Bharosa' வெப்சைட்டைப் போலவே தோற்றமளிக்கும் ஒரு போலி இணையதளம் (இன்சூரன்ஸ் மோசடி) குறித்து காப்பீட்டுதாரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
"igmsirdai.online" என்ற பெயரில் போலியாக ஒரு புகார் அளிக்கும் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதை IRDAI அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளம் என்று மக்களை நம்ப வைத்து ஏமாற்றுவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
'igmsirdai.online' என்பது IRDAI அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளம் இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ள ஆணையம், மக்கள் இந்த இணையதளத்தைப் பார்வையிடுவதையோ, இதில் புகார்களைப் பதிவு செய்வதையோ அல்லது தனிப்பட்ட மற்றும் நிதிசார்ந்த தகவல்களை வழங்குவதையோ தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
'Bima Bharosa' என்பது IRDAI அமைப்பின் அதிகாரப்பூர்வ காப்பீட்டு குறைதீர்ப்பு தளமாகும். அதிகாரப்பூர்வ 'Bima Bharosa' இணையதள முகவரி 'bimabharosa.irdai.gov.in' ஆகும். பொதுமக்கள் புகார் அளிப்பதற்கு முன் இணையதள முகவரியைச் சரிபார்ப்பது அவசியம்.
IRDAI அமைப்பின் பிரதிநிதி என்று கூறிக்கொள்ளும் எந்தவொரு நபரிடமோ அல்லது இணையதளத்திடமோ காப்பீடுதாரர்கள் தங்களின் வங்கி விவரங்கள், கிரெடிட் அல்லது டெபிட் கார்டு தகவல்கள், KYC ஆவணங்கள், கடவுச்சொற்கள் மற்றும் OTP நம்பர்களைப் பகிர வேண்டாம் என்று IRDAI பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அங்கீகரிக்கப்படாத அல்லது மோசடியான இணையதளங்களுடனான தொடர்புகளால் காப்பீதாரர்களுக்கு ஏற்படும் எந்தவொரு இழப்புகளுக்கும் அல்லது தகவல் கசிவுக்கும் தாங்கள் பொறுப்பேற்க மாட்டோம் என்றும் IRDAI அமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்சூரன்ஸ் துறையில் அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடிகளைத் தடுக்க மக்கள் பின்வரும் விஷயங்களில் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும்:
* எஸ்.எம்.எஸ் (SMS) அல்லது வாட்ஸ்அப் மூலம் வரும் சரிபார்க்கப்படாத லிங்க்குகளை ஒருபோதும் கிளிக் செய்யக்கூடாது. இவை உங்கள் வங்கி விவரங்களைத் திருடும் போலி இணையதளங்களாக (Fake Links) இருக்கலாம்.
* குறிப்பாக, பெயர், மொபைல் எண், பாலிசி விவரங்கள், வங்கி விவரங்கள், KYC ஆவணங்கள், ரகசிய எண்கள், கடவுச்சொற்கள் அல்லது OTP போன்ற தகவல்களை முன்பின் தெரியாத நபர்களிடம் போன் மூலமாகவோ அல்லது எந்தவொரு சந்தேகத்திற்குரிய இணையதளத்திலும் உள்ளிடுவதை காப்பீட்டுதாரர்கள் தவிர்க்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
* குறை தீர்க்கும் போர்ட்டல்கள் அல்லது வாடிக்கையாளர் சேவை எண்கள் என்ற பெயரில் கூகுளில் இருக்கும் போலி எண்களைத் தொடர்பு கொண்டு புகார் (Fake Complaints) அளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
எப்போதும் காப்பீட்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மொபைல் செயலியை மட்டுமே பயன்படுத்துவது பாதுகாப்பானது என்று ஆணையம் கூறியுள்ளது.
மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால், உங்கள் பாலிசி ஆவணத்தில் உள்ள அதிகாரப்பூர்வ வாடிக்கையாளர் சேவை மைய எண்ணை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம்.