

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் குறித்த அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில், இம்முறை மிகப் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட போவது உறுதி. இதற்கு மிக முக்கிய காரணமே நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் தான். சினிமாவில் இருந்து விலகி தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் விஜய், தமிழ்நாட்டின் மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளார் என காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி இன்று தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக தவெக மற்றும் காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தியும் விஜய்யை நேரில் சந்தித்து பேசி இருந்தார்.
இதனால் தவெக மற்றும் காங்கிரஸ் கூட்டணி வைக்க அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் களததில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் காங்கிரஸ் எப்போதும் போலவே திமுக கூட்டணியில் தொடர்ந்து இருக்கும் என காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
காங்கிரஸ், திமுக கூட்டணியில் தொடர்ந்தாலும் இம்முறை அதிக தொகுதிகளை கேட்கவும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கவும் விரும்புவதாக தகவல்கள் வெளி வருகின்றன. மேலும் காங்கிரஸ் தொண்டர்களும் இதனை விரும்புவதாக பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறுகையில், “கடந்த 60 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் காங்கிரஸ் பெரிய அளவில் வெற்றியைப் பெறவில்லை. தொடர்ந்து பல ஆண்டுகளாக காங்கிரஸ் பலவீனமாகவே இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் பலத்தை பயன்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது.
அதிக சீட் மற்றும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதே தற்போது தொண்டர்களின் கோரிக்கையாக உள்ளது. காங்கிரஸ் கட்சியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, தொண்டர்கள் இந்த கோரிக்கையை வைத்துள்ளனர். நான் விஜய்யை சந்தித்தது கூட்டணி பேச்சுவார்த்தைக்காக அல்ல; தனிப்பட்ட முறையில் அவரை சந்தித்தேன். கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து காங்கிரஸ் மேலிடம் தான் முடிவெடுக்கும்.
தமிழ்நாட்டில் மிகப் பெரும் அரசியல் சக்தியாக விஜய் உருவாகி விட்டார். அவர் நடத்தும் கூட்டங்களில் நடிகர் விஜய்யை காண பொதுமக்கள் வருவதில்லை; தலைவர் விஜய்யை காணவே பொதுமக்கள் அதிகளவில் கூடுகின்றனர்” என அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தவெக தலைவர் விஜய்யுடன், ராகுல் காந்தி பேசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிரவீன் சக்கரவர்த்தியும் விஜய்யுடன் தனிப்பட்ட முறையில் பேசி இருக்கிறார். ஆகவே தவொக - காங்கிரஸ் கூட்டணி அமையுமா என்பதில் பெரும் சந்தேகம் எழுந்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு எத்தனை இடம் வழங்கப்படும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
காங்கிரசுக்கு அதிக சீட்டுகளை வழங்க திமுக முன் வந்தாலும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்க தயாராக இல்லை. கடந்த 2021 ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 25 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில் 18 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், இம்முறை அதிக தொகுதிகளை கேட்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது