
இன்றைய நவீன உலகில் அனைத்து துறைகளிலும் ஏஐ தொழில்நுட்பம் உள்நுழைந்து விட்டது. ஏஐ தொழில்நுட்பத்தின் தாக்கம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், பலரும் தங்கள் வேலையை இழக்கவும் ஏஐ காரணமாக இருந்துள்ளது. இந்நிலையில் ஏஐ மற்றுமொரு மோசடி செயலுக்கும் உதவியிருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக சைபர் கிரைம் மோசடிகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், மோசடி கும்பல் புதுப்புது வழிகளைத் தேர்ந்தெடுத்து தொடர் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் தற்போது ஏஐ தொழில்நுட்பத்தின் மூலமும் சைபர் குற்றங்களைச் செய்துள்ளது ஒரு மோசடி கும்பல்.
உத்தரகாண்டின் டேராடூன் பகுதியில் ஒரு நபர் போலியான ஏஐ வீடியோவை நம்பி முதலீடு செய்து மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார். அவர் பார்த்த ஒரு ஏஐ வீடியோவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கிரிப்டோ முதலீடு செய்ய விளம்பரப்படுத்துவது போன்று இருந்துள்ளது. அதாவது ரூ.21,000 பணத்தை முதலீடு செய்தால் ஏழே நாட்களில் ரூ.6.5 இலட்சம் கிடைக்கும் என அந்த வீடியோவில் இருந்துள்ளது. இதனை உண்மையென நம்பி ஒருவர் ரூ.66 இலட்சத்தை இழந்துள்ளார்.
வீடியோவைப் பார்த்தவர் பேஸ்புக்கில் இருந்த ஒரு லிங்கை கிளிக் செய்து, ஒரு செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். அதில் அவர் தகவல்களைக் கொடுத்து உள்நுழைந்த பிறகு, மோசடிகாரர்கள் இவரைத் தொடர்பு கொண்டு முதலீடு குறித்த ஆசைகளை அள்ளி வீசியுள்ளனர். இதனை நம்பி அவரும் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை முதலீடு செய்துள்ளார்.
ஒரு கட்டத்திற்கு மேல் கையில் இருந்த ரூ.66 இலட்சம் பணத்தையும் முதலீடு செய்த பின், செயலியில் இருந்து அழைப்புகள் ஏதும் வராமல் போனது. அதன்பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்துள்ளார். பிறகு உடனே சைபர் கிரைமில் புகார் கொடுத்ததன் பேரில், போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.
மெட்டா நிறுவனத்தின் உதவியின் மூலம் நொய்டாவைச் சேர்ந்த நிக்கி பாபு மற்றும் நிதின் கவுர் ஆகிய இருவரை காவல் துறை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களிடம் இருந்து 6 சிம் கார்டுகள், 6 செக் புக்குகள் மற்றும் 12 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை காவல் துறை தேடி வருகின்றனர்.
ஏஐ தொழில்நுட்பம் மனிதனின் வேலைகளை எளிமையாக்க கொண்டுவரப்பட்ட அதிநவீன கண்டுபிடிப்பு. ஆனால் இதனைப் பயன்படுத்தி மக்களையும் ஏமாற்றலாம் என மோசடி கும்பல் நிரூபித்துள்ளது. ஆகையால் பொதுமக்கள் தான் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
எந்தவொரு அரசும் இதில் முதலீடு செய்தால் இவ்வளவு இலாபம் கிடைக்கும் என விளம்பரம் செய்வதில்லை. இருப்பினும் போலியான ஏஐ வீடியோக்களை பொதுமக்கள் எளிதில் நம்பி விடுகின்றனர். இன்றைய காலகட்டத்தில் எதையும் ஆராய்ந்து பார்க்காமல் நம்ப வேண்டாம் என காவல்துறை எச்சரித்துள்ளது. அதோடு யாரேனும் தொடர்பு கொண்டு தனிப்பட்ட தகவல்களைக் கேட்டால் கொடுக்க வேண்டாம் எனவும் அறிவுரைத்துள்ளனர்.