

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் உள்ள வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மக்கள் முன்னிலையில் விஜய் பேசினார். இந்தக் கூட்டத்தின் போது கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலில் சிக்கி 41 தொண்டர்கள் உயிரிழந்தனர். அதோடு 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இன்னும் ஒரு தேர்தலைக் கூட சந்திக்காத விஜய்க்கு, கரூர் சம்பவம் மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து விசாரனை நடந்து வரும் நிலையில், சிபிஐ விசாரனைக்கு உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். இந்நிலையில் சிபிஐ அதிகாரிகள், தற்போது தவெக தலைவர் விஜய்யை விசாரிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கரூர் சம்பவத்தில் இருந்து மீண்டு வந்த விஜய், சமீபத்தில் புதுச்சேரியில் பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டி, மக்கள் முன்னிலையில் பேசினார். அதுமட்டுமின்றி கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. இந்நிலையில் அடுத்ததாக ஈரோட்டில் பொதுக்குழு கூட்டத்தைக் கூட்ட தவெக முடிவு செய்துள்ளது.
சிபிஐ நடத்தும் விசாரணையை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு ஒன்று தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதன்படி சிபிஐ அதிகாரிகள் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
தவெக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் மற்றும் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து விட்டனர். இவர்கள் அனைவரும் சிபிஐ விசாரணையில் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.
இந்நிலையில் அடுத்ததாக தவெக தலைவர் விஜயை சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க உள்ளனர். ஆனால் கரூரில் விஜய்யை விசாரிப்பது பாதுகாப்பு பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடும் என்பதால், விஜய்யை சென்னையிலேயே விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் எப்போது விசாரணையை மேற்கொள்வார்கள் என்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் இன்னும் ஓரிரு நாட்களில் இந்த விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விசாரணையில் விஜய் என்ன சொல்லப் போகிறார்; சிபிஐ விசாரணை முடிவுகள் எப்படி இருக்கப் போகிறது என்பது குறித்து தவெக தொண்டர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தமிழ்நாட்டில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய பிறகு, மிகவும் கவனிக்கப்படும் நபராக இருந்து வருகிறார். நடப்பாண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட அரசியல்வாதியும் விஜய் தான். இந்நிலையில் கரூர் சம்பவம் விஜய்யின் அரசியல் வாழ்க்கையில் முக்கியத் திருப்பமாக மாறியது. ஆனாலும் விஜய்க்கு மக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பு, துளியும் குறையவில்லை என்பதை புதுச்சேரியில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் காண முடிந்தது.
அதோடு கரூரில் நடைபெற்றது போல் புதுச்சேரியில் நடைபெறாமல் இருக்க, கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை தவெக தலைமை ஏற்கனவே திட்டமிட்டது. அதற்கேற்ப காவல்துறை அதிகாரிகளும் மிகவும் கவனத்துடன் செயல்பட்டு, புதுச்சேரி பொதுக்குழு கூட்டத்தில் எவ்வித அசம்பாவிதமும் நிகழாத வண்ணம் பார்த்துக் கொண்டனர்.