அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வரும் தவெக தலைவர் விஜய், அடுத்ததாக ஈரோட்டில் நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்தில் மக்கள் முன்னிலையில் பேசவுள்ளார். கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் பொதுக்குழு கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில், சிறிது நாட்களுக்கு மக்கள் சந்திப்பை தள்ளி வைத்திருந்தார் விஜய். இந்நிலையில் சிறிது நாட்கள் இடைவெளிக்குப் பின் காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரியில் மக்கள் சந்திப்பை வெற்றிகரமாக நடத்தி, அடுத்ததாக ஈரோட்டிலும் நடத்த உள்ளார்.
வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி ஈரோட்டில் காலை 11 மணிக்கு பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. ஈரோடு கூட்டத்திற்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது ஐந்து நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. சமீபத்தில் அதிமுகவின் முன்னாள் மூத்த அரசியல்வாதி கே.ஏ.செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
50 ஆண்டுகால அனுபவம் இருந்தமையால், அவருக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. ஈரோடு அவரது சொந்த மாவட்டம் என்பதால், செங்கோட்டையன் தான் பேச்சுவார்த்தை நடத்தி பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் செங்கோட்டையன் தவெக-வில் இணைந்த பிறகு, ஈரோட்டில் நடைபெறவிருக்கும் முதல் பொதுக்குழு கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் விஜயமங்கலம் டோல்கேட் பகுதிக்கு அருகாமையில் உள்ள சரளை என்ற இடத்தில் தவெக பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த இடம் இந்து சமய அறநிலையைத் துறைக்கு சொந்தமான இடம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது டெபாசிட் மற்றும் இடத்திற்கான வாடகை கட்டணமாக ரூ.1 லட்சததை தவெக செலுத்தியுள்ளது. கட்டணத்தை செலுத்திய பிறகு 5 நிபந்தனைகளுடன் தமிழக வெற்றிக் கழகம் பொதுக்கூட்டத்தை நடத்திக் கொள்ள காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது.
5 நிபந்தனைகள்:
1. தமிழக வெற்றிக் கழக பொதுக்கூட்டத்திற்கு வரும் தொண்டர்களின் குடிநீர், உணவு மற்றும் பாதுகாப்பை கடசியினர் உறுதி செய்ய வேண்டும்.
2. பொதுக்குழு கூட்டம் முடிந்த பிறகு அந்த இடத்தை தவெக தனது சொந்த செலவில் சுத்தம் செய்து தர வேண்டும்.
3. பொதுக்குழு கூட்டத்தில் ஒலிப்பெருக்கியை பயன்படுத்துவதற்கு முன்பு, காவல்துறையிடம் முறையான அனுமதி பெற வேண்டும்.
4. பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடத்திற்கு தவெக எவ்வித உரிமையையும் கோரக்கூடாது.
5. காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே பொதுக்குழு கூட்டத்தின் பிரச்சாரம் நடைபெற வேண்டும்.
ஈரோடு பொதுக்குழு கூட்டத்தில் விஜய் 2 மணி நேரம் மட்டுமே பேச இருப்பதால், அதற்கேற்றவாறு தொண்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஈரோடு பொதுக்குழு கூட்டத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களையும் விஜய் அறிமுகப்படுத்தப் போவதாக தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகாத நிலையில், ஈரோடு பொதுக்குழு கூட்டம், மற்ற அரசியல் கட்சிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அரசியலைப் பொறுத்தவரை கொங்கு மண்டலத்தில் ஈரோடு மாவட்டம் மிக முக்கியப் பகுதி. இந்நிலையில் செங்கோட்டையன் துணையோடு, கொங்கு மண்டலத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் கோட்டையாக மாற்ற விஜய் வியூகம் வகுத்து வருகிறார்.
இந்நிலையில் ஈரோடு பொதுக்குழு கூட்டத்தில் விஜய் என்ன பேசப் போகிறார் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும். மேலும் கட்சியை வலுப்படுத்த ஈரோடு கூட்டத்தில் விஜய் பலவேறு நடவடிக்கைகளை எடுப்பார் எனவும் தெரிகிறது