

அதிக வரி செலுத்துவோர், தாங்கள் கட்ட வேண்டிய வருமான வரியை குறைக்க பல புதுமையான வழிகளை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, சிலர் தங்கள் பணத்தை வேறு நபர்களின் வங்கிக் கணக்கிற்கு மாற்றி, அதன் மூலம் வரும் வருமானத்திற்கு வரி விலக்கு பெற முடியுமா என்று பார்க்கின்றனர்.
வருமான வரி என்பது ஒரு தனி நபரோ அல்லது ஒரு நிறுவனமோ தான் ஈட்டும் ஒரு குறிப்பிட்ட வருமானத்திற்கேற்ப தான் சார்ந்திருக்கும் நாட்டிற்கு செலுத்தும் வரி ஆகும். அந்த வரியைக் கொண்டே அரசு நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கும்.
உங்கள் மொத்த வருமானம் அடிப்படை விலக்கு வரம்பை மீறினால், நீங்கள் ஒவ்வொரு வருடமும் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும். இது வயது மற்றும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் வரி முறையைப் பொறுத்து மாறுபடும்.
அந்த வகையில் அரசுக்கு அதிகமாக வரி செலுத்தும் நபர்கள் தாங்கள் கட்ட வேண்டிய வருமான வரியை குறைப்பதற்காக மறைமுகமாக பல்வேறு வழிமுறைகளை பின்பற்றுகிறார். குறிப்பாக, சிலர் தங்கள் பணத்தை மனைவி அல்லது வேறு நபர்களின் வங்கிக் கணக்கிற்கு மாற்றுவது, கடன் கணக்குகள் போன்றவற்றை காட்டுவதன் மூலம் வரும் வருமானத்திற்கு வரி விலக்கு பெற முடியுமா என்று பார்க்கின்றனர்.
இந்நிலையில் கணவன் தனது மனைவிக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை மாற்றும் போது, அந்தப் பணத்தை மனைவி முதலீடு செய்வதால் வரும் லாபத்திற்கு யார் வரி செலுத்த வேண்டும்? என்பது குறித்து வரிச் சட்ட வல்லுநர் கரண்ஜோத் சிங் குரானா தரும் விளக்கங்களை பார்க்கலாம்.
வருமான வரி விதிகளின் படி, ஒரு கணவர் தனது வரி செலுத்திய வருமானம் அல்லது பணத்தை தனது மனைவியின் கணக்கிற்கு மாற்றுவதைத் தடுக்காது. மேலும், மனைவியிடமிருந்து பெறப்பட்ட எந்தவொரு பணமும் வருமான வரிச் சட்டத்தின்படி வரி விதிக்கப்படாது. எனவே, கணவன் தனது வரி செலுத்திய வருமானத்தை வாழ்க்கைத் துணையின் கணக்கிற்கு மாற்றுவது வருமான வரி சட்டத்தின் கீழ் எந்த தடையும் கிடையாது.
எனவே, கணவர் தனது மனைவிக்கு செய்யும் எந்தவொரு பணப் பரிமாற்றமும், அதாவது அது எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட ஒரு செயல்பாடுதான்.
அதேசமயம், மனைவி, கணவரிடம் இருந்து பரிசாகப் பெற்ற பணத்திலிருந்து பெறப்பட்ட கடன் பத்திரங்களிலிருந்து கிடைக்கும் வருமானம் அவரது கணவரின் வருமானத்துடன் இணைக்கப்படுவதுடம், அதற்குரிய வரியை கணவரே செலுத்த வேண்டும். மனைவியின் தனிப்பட்ட வருமானத்துடன் இது சேர்க்கப்படாது. மேலும், மனைவியின் PAN எண்ணில் இருந்து, வங்கி, தரகர் போன்றவர்களால் வரி கழிக்கப்பட்டிருந்தால், கணவருக்கு அந்த TDS-ன் வரவு கோரும் உரிமை உண்டு.
அதாவது, ஒரு நபர் வரியை சேமிக்கும் நோக்கில் தனது மனைவிக்கு பணத்தை மாற்றினாலும், அந்தப் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு வரி செலுத்தும் பொறுப்பு, கணவருக்கு மட்டுமே உண்டு.
அதாவது வரி ஏய்ப்புக்காக ஒருவரது வருமானத்தை உறவினர்களின் கணக்கிற்கு மாற்றுவதை தடுப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். இங்கே குறிப்பிட வேண்டிய ஒரே விதிவிலக்கு என்னவென்றால், பிரிந்து வாழும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சொத்துக்கள் மாற்றப்பட்டால் மட்டுமே 'கிளப்பிங்' (Clubbing of Income)விதி பொருந்தாது.