

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வரும் ஜூன் 30, 2026 முதல் இந்தியாவில் தற்போது பயன்படுத்தப்படும் காகித ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டு, அதற்குப் பதிலாக பிளாஸ்டிக் நோட்டுகளை அறிமுகப்படுத்த உள்ளதாகச் சமூக ஊடகங்களில் ஒரு தகவல் தீயாகப் பரவிய நிலையில் இதுகுறித்து மத்திய பத்திரிகை தகவல் அலுவலகம் முக்கிய விளக்கம் அளித்துள்ளது.
பொதுமக்களின் பயன்பாட்டில்6 உள்ள காகித ரூபாய் நோட்டுகள் கிழிந்து போவதால் அதற்கு பதிலாக அதிக ஆயுட்காலம் கொண்ட பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் வருகிற 30-ம்தேதி முதல் அறிமுகமாக உள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது. இது பொதுமக்களிடையே தேவையில்லாத பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி இருந்தது.
தற்போது பயன்பாட்டில் இருக்கும் காகித ரூபாய் நோட்டுகள் அதிகளவில் கிழியும், அழுக்காகும்.
காகித நோட்டுகளை மாற்றுவதற்கான செலவு உயர்ந்துள்ள நிலையில், நீண்ட நாட்கள் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் நோட்டுகள், இந்தியாவில் விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்று இந்த விவகாரம் குறித்து மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் இதுகுறித்து தங்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள உண்மை கண்டறியும் குழு, ‘ஜூன் 30, 2026 முதல் காகித நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டு பிளாஸ்டிக் நோட்டுகள் அறிமுகமாகும் என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் போலியானது. காகித நோட்டுகளைத் திரும்பப் பெறும் திட்டம் எதுவும் ரிசர்வ் வங்கியிடம் இல்லை’ என்று தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், பொதுமக்கள் இதுபோன்ற சரிபார்க்கப்படாத வதந்திகளை நம்பவோ, மற்றவர்களுக்குப் பகிரவோ வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. எனவே காதிக நோட்டுகள் செல்லாது என்று பரவும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 5, 2026 அன்று நடைபெற்ற பணவியல் கொள்கைக் குழு (MPC) கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா, இந்தியாவில் பாலிமர் (பிளாஸ்டிக்) ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்துவது குறித்த ஆலோசனைகள் பரிசீலனையில் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
இருப்பினும், இந்தத் திட்டம் இன்னும் ஆரம்பக் கட்டத்திலேயே உள்ளது என்றும், இதன் சாதக பாதகங்கள் குறித்து மட்டுமே ஆராயப்பட்டு வருவதால், பிளாஸ்டிக் நோட்டுகளை அறிமுகம் செய்வது குறித்து இதுவரை எந்தவொரு இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெளிவாக விளக்கியுள்ளார்.
வழக்கமாக ஒரு புதிய வடிவமைப்பு கொண்ட நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டாலும், பழைய நோட்டுகளும் உடனடியாகச் செல்லாததாக அறிவிக்கப்படுவதில்லை. அவை இரண்டும் குறிப்பிட்ட காலம் வரை சந்தையில் ஒன்றாகவே புழக்கத்தில் இருக்கும் என்பதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.
ஏற்கனவே ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகள் பாலிமர் நோட்டுகளை வெற்றிகரமாக பயன்படுத்தி வருகின்றன. இந்தியாவில் 2012-ம் ஆண்டிலேயே பாலிமர் நோட்டுகளை சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் ஏடிஎம் இயந்திரங்கள் மற்றும் பண பரிவர்த்தனை சாதனங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்களால் அந்த முயற்சி நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வங்கி மற்றும் அரசு கொள்கைகள் சார்ந்த எந்தவொரு தகவலாக இருந்தாலும், அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மட்டுமே நம்ப வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அரசுத் திட்டங்கள் குறித்து ஏதேனும் சந்தேகத்திற்குரிய தகவல்கள் கிடைத்தால், அவற்றை +91 8799711259 என்ற வாட்ஸ்அப் எண் அல்லது factcheck@pib.gov.in என்ற மின்னஞ்சல் மூலம் உண்மை கண்டறியும் குழுவிற்கு அனுப்பி சரிபார்க்கலாம்.