இஸ்ரேல் காசா போர் முடிவிற்கு பிறகு காசாவை அமெரிக்கா கைப்பற்றி அந்த மக்களுக்கு உதவி செய்ய திட்டமிட்டிருப்பதாக அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் பேசியிருக்கிறார்.
பாலஸ்தீனத்தை இஸ்ரேலின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க ஹமாஸ் என்ற அமைப்பு செயல்படுகிறது. ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவாக இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பு ஈரானில் இருந்து வருகிறது. இந்த இரு அமைப்புகளையும் அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் தீவிரவாத பட்டியலில் இணைத்துள்ளனர்.
ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதுமுதல், இஸ்ரேல் கொடூரமான பதில் தாக்குதலில் ஈடுபட்டது. அமெரிக்கா கூட போரை நிறுத்துமாறு கூறிவிட்டது. ஆனால், இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினரை முழுவதுமாக ஒழிக்கும்வரை ஓயமாட்டோம் என்று சொல்லிவிட்டதால், தொடர்ந்து போர் நடைபெற்று வந்தது. தொடர்ந்து 15 மாதங்களாக நடைபெற்று வந்த இந்த போரினால், பாலஸ்தீன மக்கள் பஞ்சம், பட்டினி மற்றும் போர் காரணமாக சித்ரவதைகளை அனுபவித்து வந்தனர். நோய் மறுபுறம் மக்களை காவு வாங்கியது.
இவற்றிற்கு பயந்தும் குண்டுகளுக்கு பயந்தும் பாலஸ்தீன மக்கள் அங்கிருந்து வெளியேறி பக்கத்து நாடுகளுக்கு தப்பிச் சென்றனர்.
இந்த சமயத்தில்தான் சமீபத்தில் இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது. பணயக் கைதிகளை இருநாடுகளும் விடுவித்து வருகின்றன.
6.5 லட்சம் பாலஸ்தீன மக்கள் வடக்கு காசா பகுதிக்கு திரும்புவதற்காக காத்திருப்பதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இப்படியான நிலையில்தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு அறிவிப்பை விட்டிருக்கிறார்.
நேற்று இஸ்ரேல் பிரதமர் அமெரிக்காவிற்கு வருகைத் தந்திருந்தார். அப்போது அமெரிக்கா அதிபரும் இஸ்ரேல் அதிபரும் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஒரு கூட்டு செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டனர்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் ட்ரம்ப் உரையாற்றினார். அதாவது, “அமெரிக்கா காசா பகுதிகளை கையகப்படுத்தும். நாங்கள் அந்த இடங்களை சொந்தமாக வைத்திருப்போம். மேலும் அங்கிருக்கும் வெடிக்காத குண்டுகள் போன்றவற்றை அப்புறப்படுத்துவோம்.
அங்கு ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கப் போகிறோம். இது குறித்து நான் பிராந்தியத் தலைவர்களுடன் பேசியுள்ளேன், அவர்கள் இந்த யோசனைக்கு ஆதரவு வழங்கியுள்ளதாகவும், காசா ஒரு உலக மக்களின் வீடாகவும் மாறும்.” என்று ட்ரம்ப் பேசியிருக்கிறார்.