

இது தேர்தல் பொங்கல்.. தேர்தல் நெருங்க நெருங்க, வரும் வாய்ப்புகளையெல்லாம் அரசியல் கட்சிகளும் அரசுகளும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தவே காய்களை நகர்த்துகின்றன.
விரைவில் தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழக அரசு பொங்கல் பரிசுத்தொகை குறித்த பல்வேறு பரிசீலனைகளுக்குப் பின் தகுதியுள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 ரொக்கப்பணம் வழங்கும் முடிவை அறிவித்தது. அதனை தொடர்ந்து 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 எண்ணிக்கையிலான அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக்கரும்பு மற்றும் ரூ.3 ஆயிரம் ரொக்க பணம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதனை தொடர்ந்து பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. 3,000 ரொக்கப் பணம் வழங்கும் திட்டத்தை கடந்த ஜனவரி 8-ம்தேதி முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கும் வகையில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
இதைத் தொடர்ந்து கடந்த 11-ந்தேதி வரை 24 ஆயிரத்து 924 ரேஷன் கடைகளில் உள்ள 1 கோடியே 86 லட்சத்து 23 ஆயிரத்து 426 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் ரொக்கத் தொகை ரூ.5 ஆயிரத்து 587.02 கோடி விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. 1 கோடியே 39 லட்சத்து 6 ஆயிரத்து 292 வேட்டி, சேலைகளும் வழங்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு பொங்கல் ரொக்க பரிசுக்கு ரூ.6 ஆயிரத்து 687 கோடியே 51 லட்சத்து 30 ஆயிரம் நிதியை ஒதுக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் 2.27 கோடி ரேஷன் அட்டைகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், அதில் 2.22 கோடி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பும், பொங்கல் பரிசு தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.
பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.3000 ரொக்க பணத்தை, பொதுமக்கள் தங்களுடைய ரேஷன் கார்டுக்கு உட்பட்ட ரேஷன் கடையில் மட்டுமே வாங்க முடியும்.
அதாவது வேலை நிமித்தமாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ சொந்த ஊரை விட்டு வெளியூர்களில் வசிப்பவர்கள், அவர்களுடைய ரேஷன் கார்டு சொந்த ஊரில் இருக்கிறது என்றால், அவர்கள் சொந்த ஊரில் உள்ள அவர்ளுடைய ரேஷன் கார்டுக்கு உட்பட்ட ரேஷன் கடையில் மட்டுமே வாங்க முடியும்.
இந்தியாவில் ‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ திட்டத்தின் கீழ் வேறு மாநிலங்களை சேர்ந்த மக்கள் கூட தாங்கள் வசிக்கக்கூடிய ஊரிலேயே கைரேகை வைத்து ரேஷன் பொருட்களை வாங்க முடியும். ஆனால் பொங்கல் பரிசு தொகை அப்படி வாங்க முடியாது. தங்களுக்கு சொந்தமான ரேஷன் கடை எதுவோ அந்த ஊருக்கு சென்று அங்கே குடும்ப உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் கைரேகை வைத்தால் மட்டுமே பொங்கல் பரிசு தொகையை வாங்க முடியும்.
எனவே வெளியூர்களில் இருக்கக்கூடிய பொதுமக்கள் தங்கள் சொந்த ஊரில் உள்ள ரேஷன் கடை ஊழியர்களை தொடர்பு கொண்டு எந்த தேதியில் வந்தால் பொங்கல் பரிசு தொகையை வாங்க முடியும் என கேட்டு தெரிந்துகொண்டு அந்த தேதியில் சொந்த ஊருக்கு சென்று பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகளில் இன்று (13-ம் தேதி) வரை (இன்றுடன் கடைசி) பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
அதேசமயம் வெளியூரில் வசிப்பவர்களுக்கு சொந்த ஊர் திரும்பி பொங்கல் பரிசை பெற்றுக் கொள்ளும் வகையில் ஜனவரி 14-ம்தேதி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அன்றைய தினம் வெளியூரில் இருந்து வருபவர்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று வாங்கிக் கொள்ளலாம். எனவே கடைசி வாய்ப்பாக 14-ம் தேதியை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்கூட்டியே விடுமுறை கிடைக்காத வெளியூரில் வசிப்பவர்கள் ஜனவரி 15-ம் தேதி தைப் பொங்கல் அன்று தான் சொந்த ஊர் செல்ல முடியும் என்பவர்கள் எப்படி பொங்கல் பரிசை பெறுவது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.