

தமிழக அரசியல் களத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலுக்கு, முன்னணி கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை இப்போதே தொடங்கி விட்டன. தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக-விற்கு போட்டியாக தற்போது விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், கடுமையான போட்டியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப தமிழக வெற்றிக் கழகத்தின் பலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் அதிமுக-வின் முன்னணி அரசியல்வாதியான கே.ஏ.செங்கோட்டையன் தவெக-வில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து விஜய்யை முதல்வராக்கும் திட்டத்தோடு, கூட்டணி பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறார் செங்கோட்டையன். கடந்த சில தினங்களுக்கு முன்பு பொங்கலுக்குள் மேலும் ஒரு அதிர்ச்சியை அளிப்பேன் என அவர் கூறியிருந்தார். மேலும் தவெக தான் அடுத்த அதிமுக என ஈரோடு மக்கள் சந்திப்பு கூட்டத்தில் செங்கோட்டையன் சூளுரைத்தார்.
அதற்கேற்ப விரைவில் அதிமுகவின் முன்னணி நிர்வாகிகள் தவெக-வில் விரைவில் இணைவார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தவெக-வில் அடுத்து இணையப் போகும் அதிமுக நிர்வாகி யார் என்ற கேள்வி அரசியல் களத்தில் இப்போதே சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது.
மறுபுறம் கூட்டணியை விரிவுபடுத்த முடியாமல் அதிமுக திணறி வரும் நிலையில், நேரடியாக களத்தில் இறங்கியது பாஜக. இந்நிலையில் நேற்று முன்தினம் பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயில் சென்னைக்கு வந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து கூட்டணி விவகாரம் மற்றும் தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசித்தார்.
மேலும் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை அதிமுகவில் இணைப்பது தொடர்பாகவும் அவர் கலந்தாலோசித்தார். அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, இதற்கு இபிஎஸ் சம்மதம் தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என ஓபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் ஓபிஎஸ் தரப்பில் உள்ள மாவட்ட செயலாளர்கள் தவெக-வில் இணைவதே சிறந்தது எனத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தான் பொங்கலுக்குள் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் தவெக-வில் நிச்சயமாக இணைந்து விடுவார்கள் என்று செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் ஓபிஎஸ் ஒரு நல்ல முடிவை எடுப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஒருவேளை ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் தவெக-வில் இணைந்து விட்டால், அது அதிமுக-விற்கு பலத்த அடியாக இருக்கும்.
ஏனெனில் ஏற்கனவே செங்கோட்டையின் இணைந்த நிலையில், தற்போது ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனின் வரவு தவெக-வின் பலத்தை மேலும் அதிகரிக்கும். இது தவிர செங்கோட்டையன் பாமக மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளிடமும் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்த உள்ளார்
வருகின்ற சட்டமன்றத் தேர்தலுக்குள் தவெக-வை பலமான கட்சியாக மாற்ற செங்கோட்டையன் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தவெக-வில் ஓபிஎஸ் வரவு, அக்கட்சியின் நம்பிக்கையை மேலும் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓபிஎஸ் மட்டுமின்றி எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர்களும், தவெக-வில் இணைவார்கள் என்று செங்கோட்டையின் நம்புகிறார். இதன் காரணமாக அதிமுகவின் பலம் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் குறைந்து விடுமோ என்ற அச்சத்தில் தொண்டர்கள் உள்ளனர்.
இந்நிலையில் அதிமுகவின் பலத்தை கூட்ட பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகின்ற 28ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்ல உள்ளார். மேலும் கூட்டணி குறித்த விஷயங்களிலும் அதிக கவனம் செலுத்த அதிமுக தலைமை நடவடிக்கை எடுக்க உள்ளது. எதுவாக இருந்தாலும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நிச்சயமாக ஒரு புதிய திருப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.