

சமையலிலும், ஆயுர்வேத மருத்துவத்திலும் மஞ்சள் தூள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் சமீப காலமாக மஞ்சள் தூளில் கலப்படம் செய்யப்பட்டு, சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்கும்படி, தமிழக உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் நீங்கள் வாங்கும் மஞ்சள் தூளை பரிசோதனை செய்த பிறகு பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமையலில் சுவை மற்றும் நிறம் உட்பட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் மஞ்சள் தூள் பண்டைய காலம் முதலே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இது தவிர ஆயுர்வேத மருத்துவத்திலும் மஞ்சள் தூள் பல்வேறு சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் லாப நோக்கத்திற்காக சில மோசடி நிறுவனங்கள் மஞ்சள் தூளில் கலப்படம் செய்கின்றன.
கலப்பட மஞ்சள் தூள் குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், “தற்போது சந்தையில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மஞ்சள் தூளும் கலப்படமானவை அல்ல. இருப்பினும் பிரபலமான பிராண்டு நிறுவனத்தின் பெயரிலும் போலி ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு மஞ்சள் தூள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இவ்வகையான போலி மஞ்சள் தூளை பொதுமக்கள் வீட்டிலேயே எளிய பரிசோதனையின் மூலம் கண்டுபிடித்து விடலாம். நீங்கள் பயன்படுத்தும் மஞ்சள் தூளில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக 9444042322 என்ற மொபைல் எண்ணை அழைத்து புகார் தெரிவிக்கலாம்.
உணவு பாதுகாப்பு துறையின் அதிகாரபூர்வ இணையதளம் மற்றும் செயலி வழியாகவும் புகார் தெரிவிக்கலாம். புகார் கிடைத்த அடுத்த சில நாட்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடைகள் அல்லது நிறுவனங்களில் ஆய்வை மேற்கொண்டு, கடுமையான நடவடிக்கையை எடுப்பார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலப்பட மஞ்சள் தூளை கண்டறியும் எளிய சோதனை:
1. ஒரு கிளாஸில் தண்ணீரை நிரப்பி அதில் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளை சேர்க்கவும்.
2. சிறிது நேரத்திலேயே மஞ்சள் தூள் அனைத்தும் அடியில் தங்கி விட்டால் அது கலப்படமற்ற தூய மஞ்சள் தூள் என அர்த்தம்.
3. ஒருவேளை மஞ்சள் தூள் அடியில் தங்காமல் தண்ணீரில் மிதந்தாலோ அல்லது தணணீரின் நிறம் அடர் கருமஞ்சள் நிறமாக மாறினாலோ அது கலப்பட மஞ்சள் தூள்.
4. கலப்பட மஞ்சள் தூளை நீங்கள் கண்டறிந்தால், உடனே 9444042322 என்ற மொபைல் எண்ணில் புகார் தெரிவிக்கவும்.
மஞ்சள் தூளின் நிறத்தை மேம்படுத்த தீங்கு விளைவிக்கும் சாயங்கள் மற்றும் செயற்கையான நிறமிகள் கலக்கப்படுகின்றன. இதன் விளைவாக புற்றுநோய், வயிற்று வலி, செரிமான பிரச்சினைகள் மற்றும் குமட்டல் உள்ளிட்ட பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
தற்போது மஞ்சள் தூளில் சுண்ணாம்பு தூள், லெட் குரோமேட் மற்றும் காட்டு மஞ்சள் ஆகியவை கலக்கப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.