காசா இஸ்ரேல் போர் நடந்து வரும் நிலையில், புத்தாண்டான இன்றும் இஸ்ரேல் காசாவை தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலஸ்தீனத்தை இஸ்ரேலின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க ஹமாஸ் என்ற அமைப்பு செயல்படுகிறது. ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவாக இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பு ஈரானில் இருந்து வருகிறது. இந்த இரு அமைப்புகளையும் அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் தீவிரவாத பட்டியலில் இணைத்துள்ளனர்.
ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதுமுதல், இஸ்ரேல் கொடூரமான பதில் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்கா கூட போரை நிறுத்துமாறு கூறிவிட்டது. ஆனால், இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினரை முழுவதுமாக ஒழிக்கும்வரை ஓயமாட்டோம் என்று சொல்லிவிட்டதால், தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.
அதாவது ஹமாஸ் போராளிகள் உட்பட 45,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதேபோல் மேற்குக் கரையில் நடந்த மோதலில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்
ஹமாஸ் மீது போர் தொடுத்த இஸ்ரேல், 117 பணயக்கைதிகளை உயிருடன் மீட்டுள்ளது. அதேபோல், ஹமாஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணயக்கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.
இப்படியான நிலையில், உலகமே புத்தாண்டு கொண்டாடி வரும் இன்றைய தினத்தில் இஸ்ரேல் காசாவை தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 12 பாலஸ்தீனர்கள் இறந்துள்ளனர்.
பலியானவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள். சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, வடக்கு காசாவின் ஜபாலியா பகுதியில் ஒரு வீட்டின் மீது இஸ்ரேலிய தாக்குதலில் ஒரு பெண் மற்றும் நான்கு குழந்தைகள் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டனர்.
அதேபோல், மத்திய காசாவில் புரேஜ் அருகே அகதிகள் முகாமில் ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை கொல்லப்பட்டனர். இதேபோல், தெற்கு நகரமான கான் யூனிஸில் நடந்த தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேலின் கொடூரமான இந்தச் செயலை பலரும் கண்டித்து வருகின்றனர். உலகமே கொண்டாடி வரும் இந்த சமயத்தில் காசா மக்கள் மட்டும் உயிருக்கு போராடி ஓடுவது உலக நாட்டு மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.