எந்த ஒரு வலியையும் ஓரளவு சமாளிக்க முடிகிற பலரும், சளி தொல்லையை மட்டும் சமாளிக்க முடியாமல் தங்கள் தூக்கத்தை தொலைப்பர், ஏன் இது நம்மை விடாமல் துரத்துகிறது? இதை முற்றிலும் தடுக்க முடியுமா? தெரிந்து கொள்வோம்…
ஜலதோஷம், சுவாசக் குழாயை பாதிக்கும் ஒரு வைரஸ் தொற்று. எளிதில் அனைவருக்கும் பரவக்கூடியது. இதனால் பாதிக்கப்பட்ட நபரின் இருமல், தும்மல் அல்லது பேசும்போது அவர்கள் வெளியிடும் நீர்த்துளிகளின்(aerosol droplets) மூலம் இது வேகமாகப் பரவுகிறது.
சில்லென்று குளியல் போடுவதால் நமக்கு ஜலதோஷம் வருமா? நாம் குளிர்ந்த நீரில் குளிப்பதால் ஜலதோஷம் வருவதில்லை. இருப்பினும், குளிர்ந்த நீரில் குளிப்பது அல்லது குளிர்ந்த சூழலில் ஈரமாக இருப்பது உடல் வெப்பநிலையைக் குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி வைரஸ்கள் பரவுவதை எளிதாக்குகிறது. இதைத் தடுக்க வெதுவெதுப்பான நீரில் குளிப்பதும் அதன் பின் உங்கள் உடலை நன்றாக துடைத்து கொள்வதும் நல்லது. இதை பின்பற்றினால் உங்களுக்கு தேவையான வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை வரவைத்து சளி பிடிப்பதை தடுக்க முடியும்.
காலம் முழுக்க நம்மால் இந்த ஜலதோஷத்தை தடுக்க முடியுமா?
ஜலதோஷத்தை முற்றிலுமாகத் தடுப்பது சவாலானது. காரணம், அதை ஏற்படுத்தும் பல்வேறு வகையான வைரஸ்கள் மற்றும் அவற்றின் உருமாறும் திறன் அவற்றை தடுப்பத்தை மிகவும் கடினமாக்குகிறது. இருப்பினும், நாம் நல்ல சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிப்பது இதன் ஆபத்தை கணிசமாகக் குறைக்க உதவுகிறது. அதற்கு முதலில் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் முடிந்தவரை, முகத்தைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும். பின் நோய்வாய்ப்பட்ட நபர்களிடமிருந்து சமூக இடைவெளியை எதற்கும் தயங்காமல் பின்பற்ற வேண்டும். முடிந்தால் இருமல் மற்றும் தும்மல் வரும் நேரங்களில் டிஸ்ஸு தாள்கள்(Tissue papers), கைகுட்டைகள் அல்லது முழங்கைகளை பயன்படுத்துவது இந்த தொற்று உங்களிடமிருந்து மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கும்.
ஜலதோஷத்திற்கு தடுப்பூசி இல்லை என்றாலும் சீரான உணவு, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் போதுமான தூக்கம் போன்ற ஓர் ஆரோக்கியமான வாழ்க்கை முறை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதோடு, தொற்றுநோய்களுக்கு எளிதில் நீங்கள் மாட்டிக் கொள்ளும் வாய்ப்பையும் குறைக்கிறது. எனவே ஜலதோஷத்தை முற்றிலுமாகத் தடுப்பது சாத்தியமில்லை என்றாலும், இந்த நடவடிக்கைகள் மூலம் வாழ்நாள் முழுவதும் தொற்றுநோய்களின் தீவிரத்தை உங்களாலும் மற்றும் பிறருக்கு இதை அறிவுறுத்துவதாலும் இதன் தீவிரத்தை முற்றிலுமாக குறைக்க முடியும்.
குளிர்காலங்களில் நாம் என்ன செய்ய வேண்டும்:
நீரேற்றத்துடன் இருப்பதும் மற்றும் சத்தான உணவை உண்பதும் உங்கள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கும். அதற்கு நீங்கள் வசிக்கும் வீட்டின் உட்புற காற்றின் ஈரப்பதத்தை பராமரிப்பது மிகவும் முக்கியம். அதை செய்ய ஹுமிடிபைர்ஸ் (humidifiers) பயன்படுத்துங்கள். இதனால் குளிர்காலங்களில் உங்கள் சுவாச குழாய்களில் உள்ள(mucous membranes) ஜவ்வு போன்ற திரவத்தை ஈரமாக வைத்திருக்கும், இது வைரஸ் போன்ற கிருமிகளை பிடித்து வைத்து உடலுக்குள் போவதை முற்றிலும் தடுக்கிறது. இந்த நடவடிக்கைகளை உங்கள் வீட்டில் மேற்கொள்வதால், ஜலதோஷத்தின் தாக்கத்தை திறம்பட குறைக்கலாம் மற்றும் குளிர் காலங்களில் உங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், நீங்கள் நேசிக்கும் உங்கள் வீட்டாருக்கு பரவாமல் பார்த்துக்கொள்ளலாம்.
ஆக, ஜலதோஷம் என்கிற சளி தொல்லை நம் வாழ்வில் ஓர் அங்கமாக மாறிவிட்டது. இதை தடுக்க முடியாவிட்டாலும், அதை சமாளிக்க கூடிய பழக்கத்தையாவது நாமும், மற்றவர்களும் தெரிந்து கொண்டு இதன் வீரியத்தையாவது குறைப்போம்!