ஜூன் 2ம் தேதி ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா வெடிக்க தொடங்கியுள்ளது. இந்த எரிமலை இத்தாலி நாட்டில் உள்ள சிசிலி தீவில் அமைந்துள்ளது. மவுண்ட் எட்னா ஐரோப்பாவில் மிகவும் சுறுசுறுப்பான எரிமலையாக உள்ளது. மேலும் இது உலகின் மிகவும் சுறுசுறுப்பான ஸ்ட்ராடோ எரிமலையாகவும் கருதப்படுகிறது. ஸ்ட்ராடோ எரிமலை என்றால் கூம்பு வடிவ மலையில் மையத்தில் எரிமலை வாயிலுடன் இருக்கும்.
மவுண்ட் எட்வினா ஒவ்வொரு ஆண்டும் அடிக்கடி வெடித்துக் கொண்டே இருக்கிறது . இந்த எரிமலை கடைசியாக இந்த ஆண்டு பிப்ரவரி 11 அன்று வெடித்தது. அப்போது அது அதன் 3,400 மீ உயரமான சிகரத்திலிருந்து சூடான சாம்பல் மற்றும் உருகிய பாறைக் குழம்பை வெளியேற்றியது.
எரிமலை வெடிப்பு இத்தாலி நேரப்படி இரவு 10 மணியளவில் தொடங்கி அதிகாலை 1 மணிக்கு சற்று முன்னதாகவே உச்சத்தை எட்டியதாக, எரிமலைக் கண்டுபிடிப்பு வலைத்தளம் குறிப்பிட்டுள்ளது. இந்த எரிமலை வெடிப்பு சிசிலி தீவை சாம்பல் மயமாக்கியுள்ளது.
சாம்பல் புகை சுமார் 6400 மீட்டர் உயரத்தை எட்டியதாக கூறப்பட்டுள்ளது. இதனால் விமானப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
எரிமலைகளிலிருந்து பாறைக் குழம்பு , சாம்பல் மற்றும் சூடான வாயுக்கள் எழும்பும்போது பைரோகிளாஸ்டிக் ஓட்டம் ஏற்படுகிறது. அவை மிகவும் ஆபத்தானவை. வெடிக்கும் தன்மையுடையவை. இந்த செயல்பாட்டை "ஒரு எரிமலைக் குழம்பு நீரூற்றாக மாறியது" என்று இத்தாலியின் தேசிய புவி இயற்பியல் மற்றும் எரிமலையியல் நிறுவன (INGV) எரிமலை ஆய்வு செயல்பாட்டாளர் விவரித்துள்ளார்.
மேலும் சாம்பல் புகை தென்மேற்கு நோக்கி சிதறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எட்னாவின் தென்கிழக்கு பள்ளத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்ததால் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதாக இத்தாலியின் ஐஎன்ஜிவி எரிமலையியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் எரிமலைக் குழம்புகள் வெளியேறுகின்றன.
இந்நிலையில் , எட்னாவின் சிகரத்தைச் சுற்றியுள்ள பகுதியில் மட்டுமே ஆபத்து உள்ள பகுதியாக இருக்கிறது. முன்னெச்சரிக்கையாக திங்களன்று சுற்றுலா குழுக்களுக்கு எட்னா மலையில் ஏற தடை செய்யப்பட்டது. சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், எட்னா எரிமலைப் பகுதியில் இருந்த சுற்றுலாப் பயணிகள் , அங்கு எரிமலை குமுற தொடங்கியதை அடுத்து , வேகமாக வெளியேறுவதை பார்க்க முடிந்தது.
எரிமலை இருக்கும் சிசிலி பிராந்தியத்தின் தலைவர் ரெனாடோ ஷிஃபானி, "மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை" என்று இத்தாலியின் தேசிய புவி இயற்பியல் மற்றும் எரிமலையியல் நிறுவன நிபுணர்கள் உறுதியளித்ததாகக் கூறியுள்ளார். மேலும் எரிமலை குழம்பு ,சாம்பல் புகை மூட்டம் எதுவும் சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி வரும் பகுதியான சிங்கங்களின் பள்ளத்தாக்கு பகுதியை கூட கடக்கவில்லை என்றார்.
கடந்த பல ஆண்டுகளாக எட்னா எரிமலை , வருடத்திற்கு ஒரு முறையாவது வெடித்து எரிமலைக் குழம்பை கக்கும். சில சமயங்களில் அருகிலுள்ள நகரங்களை எரிமலை தூசியால் மூடும். மற்றபடி பெரிய அளவில் பிரச்சனைகளை ஏற்படுத்தியது இல்லை. இதனால் அருகிலுள்ள குடியிருப்பாளர்களுக்கு உடனடி ஆபத்து எதுவும் இல்லை என்று உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் அதிகாரிகள் எரிமலையை தொடர்ந்து கண்காணித்து எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.