
தமிழ்நாட்டில் உணவு மற்றும் மற்ற பொருட்களை நேரடியாக வீட்டிற்கே கொண்டு சேர்க்கும் டெலிவரி சேவையில் ஸ்விக்கி, சொமேட்டோ, செப்டோ, பிளிப்கார்ட் மற்றும் அமேசான் உள்ளிட்ட பல்வேறு தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்நிறுவனங்களில் டெலிவரி செய்யும் வேலைகளில் பல்லாயிரக்கணக்கான நபர்கள் பணியாற்றுகின்றனர்.
உணவு மற்றும் மற்ற பொருட்களை விநியோகம் செய்யும் பணியாளர்கள் எப்போதும் இருசக்கர வாகனங்களில் பயணிக்க வேண்டியிருப்பதால், அவர்களின் பாதுகாப்பிற்கு விபத்துக் காப்பீடு அவசியம் தேவை என்ற கோரிக்கை பல நாட்களாக எழுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டில் 50,000 டெலிவரி பணியாளர்களுக்கு விபத்துக் காப்பீடு வழங்கும் வகையில் நிதியை ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் பொருட்கள் மற்றும் உணவு டெலிவரியில் பல பேர் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் நலனைக் காக்கும் வகையில் பல வாரியம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. இந்த நிலையில் டெலிவரியின் போது பணியாளர்களுக்கு விபத்து ஏற்பட்டு உயிரிழப்போ அல்லது உடல் ஊனமோ ஏற்பட்டால், விபத்துக் காப்பீட்டின் கீழ் இழப்பீடு வழங்கப்படும். இதற்காக குழு காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
அடுத்த ஓராண்டு காலத்திற்குள் டெலிவரி பணியாளர்களுக்கு காப்பீட்டுத் திட்டம் செயல்பாட்டிற்கு வரும். இத்திட்டத்தின் கீழ் அரசே பிரீமியம் தொகையை செலுத்தும் என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.
ஒரு பணியாளருக்கு ரூ.105 பிரீமியம் என மொத்தம் 50,000 பணியாளர்களுக்கு ரூ.52.50 இலட்சம் பிரீமியம் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 18% ஜிஎஸ்டி ரூ.9.45 இலட்சத்தையும் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இதுதவிர விளம்பரம் மற்றும் இதர செலவுகளுக்கு ரூ.5 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக டெலிவரி பணியாளர்களுக்கான குழு காப்பீட்டுத் திட்டத்திற்கு ரூ.66.95 இலட்சத்தை தமிழக அரசு ஒதுக்கீடு செய்து ஒப்புதல் அளித்துள்ளது.
பணியாளர் நல வாரியம் அமைக்கப்பட்ட பிறகு, நிதி ஒதுக்கீட்டிற்கு உரிய ஒப்புதலைப் பெற வேண்டும் எனவும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.
காப்பீட்டுத் தொகை:
டெலிவரி பணியின் போது விபத்து ஏற்பட்டு உயிரிழந்தால் ரூ.5 இலட்சம் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்படும். 2 கால்கள் அல்லது 2 கைகள் அல்லது 2 கண்களிலும் பாதிப்பு ஏற்பட்டால் ரூ.5 இலட்சம் இழப்பீடு வழங்கப்படும். ஒரு கால் அல்லது ஒரு கை அல்லது ஒரு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டால் ரூ.2.5 இலட்சம் இழப்பீடு வழங்கப்படும்.