

வங்கிக் கடன் வாங்கியோர் பெருமூச்சு விடும் விதமாக ஒரு நற்செய்தியை இன்று வெளியிட்டுள்ளது ரிசர்வ் வங்கி. இதன்படி 5.50% ஆக இருந்த ரெப்போ வட்டி விகிதம் பல கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, இன்று 5.25% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வீட்டுக் கடன் மற்றும் வாகன கடன் வாங்கியோருக்கு மாதாந்திர தவணை (EMI) குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணவீக்கம் மற்றும் இந்தியப் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு, ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி அவ்வப்போது மாற்றி அமைக்கும். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் நிதிக் கொள்கை கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் குறித்து விவாதிக்கப்படுவது வழக்கம்.
அவ்வகையில் டிசம்பர் 3 ஆம் தேதி தொடங்கிய நிதிக் கொள்கை கூட்டத்தில், ரெப்போ விகிதம் குறைக்கப்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் ரெப்போ வட்டி விகிதம் 5.25% ஆக குறைக்கப்பட்டதை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா.
பொதுமக்கள் வங்கிகளில் வாங்கும் கடனூக்கான வட்டி விகிதமானது, ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கும் ரெப்போ விகிதத்தை பொருத்தே அமையும். ரெப்போ விகிதம் குறையுமானால் வங்கிகள் பொதுமக்களுக்கு வழங்கும் கடனுக்கான வட்டியும் குறையும். குறிப்பாக பொதுமக்கள் ஃபுளோட்டிங் ரேட் முறையில் கடன் வாங்கி இருந்தால் மட்டுமே, இஎம்ஐ தொகை குறையும். ஒருவேளை பிக்சட் ரேட் முறையில் கடன் வாங்கி இருந்தால் ரெப்போ விகிதம் குறைந்தாலும் இஎம்ஐ தொகை குறையாது.
ரெப்போ வட்டி விகிதம் இன்று குறைந்துள்ள நிலையில், கடன் வாங்கியவர்கள் நேரடியாக வங்கிக்கு சென்று அணுகினால் மட்டுமே வட்டிப் பலன்கள் கிடைக்கும். ஏனெனில் எந்த வங்கியும் தாமாக முன் வந்து, ரெப்போ வட்டி குறைவுக்கு ஏற்ப கடனுக்கான வட்டியைக் குறைப்பதில்லை. இருப்பினும் வட்டியை குறைக்க வங்கியை அணுகினாலும், முந்தைய வட்டி விகிதம் குறைக்கப்படும் போது, அதற்காக குறிப்பிட்ட அளவில் வங்கியால் கட்டணம் வசூலிக்கப்படும்.
சர்வதேச சூழல் மற்றும் பணவீக்கம் காரணமாக ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படாது என்று பொருளாதார வல்லுனர்கள் கணித்தனர். இருப்பினும் வல்லுனர்களின் கணிப்பைத் தவிடு பொடியாக்கும் விதமாக ரெப்போ வட்டியை 0.25 புள்ளிகள் குறைத்து சஞ்சய் மல்ஹோத்ரா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “நாட்டின் வளரச்சிக்கு ரெப்போ வட்டி குறைப்பு உதவும் என்பதால் தான் தற்போது 0.25 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 5.50%-லிருந்து 5.25% ஆக ரெப்போ வட்டி குறைக்கப்படுகிறது. இதன் காரணமாக வங்கிக் கடனுக்கான வட்டி குறையும். ஆகையால் வங்கிகளில் கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்படும்” என ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ரெப்போ வட்டி 6.50% ஆக இருந்தது. 2025 பிப்ரவரி மாதத்தில் ரெப்போ வட்டி 6.25% ஆகவும், ஏப்ரல் மாதத்தில் 6.00% ஆகவும், ஜூன் மாதத்தில் 5.50% ஆகவும் குறைக்கப்பட்டது. இதற்குப் பின் ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை.
இந்நிலையில் டிசம்பர் மாத கூட்டத்திற்கு முன்பாகவே ரெப்போ விகிதம் குறைக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்திருந்தார் அவ்வகையில் தற்போது ரெப்போ வட்டி விகிதம் 5.25% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கிக் கடன் வாங்கியவர்கள் மட்டுமின்றி, இனி கடன் வாங்க நினைத்தவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.