"இது ஒன்றும் ஐபிஎல் கிடையாது..!" - ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசே நடத்த உத்தரவு..!

jallikattu
jallikattu
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை அரசே நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

"பல போராட்டங்களுக்குப் பிறகு ஜல்லிக்கட்டுப் போட்டி மீட்டெடுக்கப்பட்டுள்ளது. எனவே, ஜல்லிக்கட்டை அரசே நடத்துவதுதான் நல்லது" என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது. ஜல்லிக்கட்டுப் போட்டிகளைத் தனிநபர்கள் நடத்துவதற்கு "இது ஒன்றும் ஐபிஎல் (IPL) போட்டி கிடையாது" என்றும் நீதிபதிகள் காட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "அவனியாபுரத்தில் தை முதல் நாள் (ஜனவரி 15) ஜல்லிக்கட்டு விழா நடைபெறும். இது கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாகக் கிராமப் பொதுமக்கள் சார்பில் நடந்து வந்தது. இந்நிலையில், 2017-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த அனுமதி அளித்த பின்னர், 2018-ஆம் ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவை நடத்த 'தென்கால் கண்மாய் பாசன விவசாயிகள் பிரதான ஜல்லிக்கட்டு சங்கம்' என்ற அமைப்பு புதிதாக உருவாக்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் மட்டுமே இவ்விழாவை ஆக்கிரமிப்பு செய்து நடத்தினர்.

இதற்கு ஆட்சேபனை தெரிவித்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், மாவட்ட நிர்வாகமே ஜல்லிக்கட்டு விழாவை நடத்தவும், அதில் 16 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவைச் சேர்க்கவும் உத்தரவிட்டது. அதன்படி மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தி வருகிறது. எனவே, வரும் ஜனவரி 15-ஆம் தேதி நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவை, அனைத்துச் சமுதாயப் பிரதிநிதிகள் அடங்கிய கிராமப் பொதுக் கமிட்டி நடத்த அனுமதிக்குமாறு மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே, கிராமப் பொதுக் கமிட்டிக்கு ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "ஜல்லிக்கட்டுப் போட்டி ஒன்றும் ஐபிஎல் விளையாட்டு கிடையாது. பல்வேறு போராட்டங்கள் மற்றும் பிரச்சினைகளுக்குப் பிறகே இதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்தப் போட்டிகளைச் சில தனிநபர்கள் நடத்தியதன் காரணமாகவே பல்வேறு பிரச்சினைகள் எழுந்தன. எனவே, இதனை அரசே நடத்துவதுதான் நல்லது" என்று தெரிவித்தனர்.

மேலும், "அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாக்கள் உலகப்புகழ் பெற்றவை. இத்தகைய சூழலில், இந்த விழாக்களைத் தனிநபர்கள் நடத்துவது பொருத்தமாக இருக்காது; அரசு நடத்துவதே சரியாக இருக்கும்" என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படியுங்கள்:
காலையில் எழுந்ததும் நீங்கள் இதைச் செய்கிறீர்களா? - மாரடைப்பு வர இதுவே முக்கியக் காரணம்..!
jallikattu
logo
Kalki Online
kalkionline.com