
இன்றைய தொழில்நுட்ப உலகில் தகவல்களைப் பரிமாற்றம் செய்ய எண்ணற்ற தகவல் சேமிப்பு பொருட்கள் சந்தைக்கு வந்துள்ளன. அதில் முக்கியமானது தான் பென் டிரைவ். கணினி மற்றும் மடிக்கணினியில் இருந்து பென் டிரைவிற்கு மிக எளிதாக தகவல்களை பரிமாற முடியும் என்பதால், பலரும் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் தகவல் திருட்டிற்கும் இது உதவலாம் என்பதைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஜம்மு காஷ்மீரில் பென் டிரைவ் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் எல்லையின் மிக முக்கிய பகுதி ஜம்மு காஷ்மீர். எந்நேரமும் பதற்றமான சூழ்நிலையே இங்கு நிலவுகிறது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானிற்கு பதிலடி கொடுத்தது இந்தியா. இருப்பினும் எல்லையில் பாதுகாப்பைப் பலப்படுத்த மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதோடு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமும், மத்திய அரசிற்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.
தகவல் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பென் டிரைவ் பயன்படுத்த இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் கமிஷனர் செயலாளர் எம்.ராஜு இந்த முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட்டார். ஜம்மு காஷ்மீரில் சைபர் பாதுகாப்பை உறுதிசெய்ய பென் டிரைவ் மற்றும் யுஎஸ்பி டிரைவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் முக்கியமான அரசு ஆவணங்கள் மற்றும் தகவல்களைப் பாதுக்காக்க முடியும். அதோடு தகவல் திருட்டு மற்றும் வைரஸ் தாக்குதலில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும்.
இந்த உத்தரவின் படி அனைத்து மாவட்டங்களிலும் இருக்கும் துணை கமிஷனர் அலுவலகங்கள், ஜம்மு காஷ்மீர் மற்றும் ஸ்ரீநகரில் இருக்கும் சிவில் செயலகங்களில் இனி பென் டிரைவைப் பயன்படுத்த இயலாது. சில நேரங்களில் பென் டிரைவ் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். அந்நேரத்தில் முறையான அனுமதி பெற்று ஒரு துறைக்கு அதிகபட்சமாக 2 பென் டிரைவ்களைப் பயன்படுத்தலாம்.
இதற்கு சம்பந்தப்பட்ட துறையின் தலைவர் மற்றும் மாநில தகவல் துறை அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதிகாரிகள் இந்த விண்ணப்பத்தை தேசிய தகவல் மையத்திற்கு அனுப்பி ஒப்புதல் பெறுவார்கள். மேலும் பயன்படுத்தப் போகும் பென் டிரைவை தேசிய தகவல் மையத்திடம் கொடுக்க வேண்டும். இந்த மையம் பென் டிரைவை சோதனை செய்து, யார் இதைப் பயன்படுத்தப் போகிறார்கள் என்ற தகவலை பதிவு செய்யும். அதன்பிறகே அரசு ஊழியர்களால் பென் டிரைவைப் பயன்படுத்த முடியும்.
நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்யவே இந்த கடுமையான விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன என்று கமிஷனர் தெரிவித்துள்ளார். அனுமதியின்றி பென் டிரைவை யாரேனும் பயன்படுத்தினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பென் டிரைவ் மட்டுமல்லாது வாட்ஸ்அப் மற்றும் பாதுகாப்பற்ற ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசு டிரைவ்:
அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரும் தகவல்களை சேமித்துக் கொள்ள கிளவுட் அடிப்படையிலான 50GB கொண்ட ‘அரசு டிரைவ்’ வழங்கப்படும். இந்த டிரைவை அனைவரும் அணுகும் படியாக வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.