

முதல்வர் விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்' வெளியாக உள்ளதை முன்னிட்டு, சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளது.ஜூலை 23 அன்று காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், அதன் பின்னர் அலுவலகப் பணிகள் வழக்கம்போல் நடைபெறும் என நிறுவனம் தகவல்
தவெக தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படம் ஜனநாயகன். பொங்கலுக்கு வெளியாக வேண்டிய இப்படம் பல்வேறு தடைகளை தாண்டி, நாளை (ஜூலை 23) வெளியாகிறது. எச். வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், கேவின் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.ஜனவரி 9ஆம் தேதி ஜனநாயகன் திரைப்படம் வெளியாக இருந்த நிலையில், சென்சார் பிரச்சனையால் 6 மாதங்களுக்கு பிறகு நாளை ஜூலை 23ம் தேதி வெளியாகிறது.
பெண்கள் மீதான மரியாதையை மேலும் அதிகரிக்க கூடிய வகையில் இத்திரைப்படம் அமைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சர் விஜய்யின் கடைசி திரைப்படமாக கருதப்படுவதால், ரசிகர்கள் திரைப்பட வெளியீட்டை ஒரு திருவிழாவை போல கொண்டாட பல ஏற்பாடுகளை செய்துள்ளனர். ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான இந்த அரசியல் ஆக்ஷன் திரைப்படம், விஜய்யின் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சரின் கடைசி திரைப்படம் என்பதால் அவரது ரசிகர்கள் மற்றும் தவெகவினர் பல்வேறு விதமான கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்றனர்.
அந்த வகையில், திருப்பூரில் ‘ஜனநாயகன்’ சிறப்பு டி-ஷர்ட்டுகள் தயாராகி வருகின்றன.
மயிலாடுதுறை அஜித் ரசிகர் மன்றம் சார்பில் 'ஜனநாயகன்' திரைப்படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து வித்தியாசமான வாழ்த்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இந்த போஸ்டர்களில், நடிகர்கள் அஜித் மற்றும் விஜய் இருவரும் கருப்பு உடையில் ஒரே இரு சக்கர வாகனத்தில் இணைந்து வருவது போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது. மேலும், "ரசிகர்களின் இதயத்தில் தல, மக்கள் மனதில் தளபதி, பாதை வேறாக இருந்தாலும், உச்சம் ஒன்று தான்" என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.மயிலாடுதுறையில் முதலமைச்சர் விஜய்யின் திரைப்படத்திற்கு அஜித் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒட்டியிருப்பது பொதுமக்கள் மற்றும் நடிகர்களின் இரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
புதுச்சேரியில் முதலமைச்சர் விஜய் போஸ்டரை ஆழ்கடலுக்குக் கொண்டு சென்ற ரசிகர்கள்
இந்நிலையில் 'ஜனநாயகன்' உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள நிலையில், சிங்கப்பூரை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு அரை நாள் விடுமுறை அறிவித்து அசத்தியுள்ளது.
திரைப்பட துறையிலிருந்து விலகி முழுநேர அரசியலில் களமிறங்கி முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய்யின் கடைசி திரைப்படம் இது என்பதால், உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. குறிப்பாக, வெளிநாடுகளிலும் பதிவுகள் (Advance Bookings) சாதனை படைத்து வருகின்றன.
இந்நிலையில், சிங்கப்பூரைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் முன்னணி தனியார் நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்குச் சிறப்புச் சலுகையை அறிவித்துள்ளது.
அதன்படி, படம் வெளியாகும் நாளான ஜூலை 23-ஆம் தேதி அன்று காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை அலுவலக ஊழியர்களுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
"எங்களது ஊழியர்களில் பலர் இப்படத்தின் முதல் காட்சி (FDFS) பார்க்க மிகுந்த ஆர்வத்துடன் இருந்தனர். அவர்களின் திரை உணர்வைக் கௌரவிக்கும் வகையிலும், தளபதி விஜய்யின் திரைப்பயணத்தின் கடைசி படத்தை கொண்டாடும் விதமாகவும் இந்த சிறிய விடுமுறை சலுகையை வழங்கியுள்ளோம்," என அந்நிறுவன நிர்வாகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நண்பகல் 12 மணிக்கு மேல் வழக்கம்போல் அலுவலகப் பணிகள் தொடரும் என்றும், அனைத்து ஊழியர்களும் உரிய நேரத்தில் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினி படங்களுக்கு சில நிறுவனங்கள் விடுமுறை அளிப்பது வழக்கமாக இருந்த நிலையில், தற்போது முதலமைச்சர் விஜய்யின் கடைசி படத்திற்கும் சிங்கப்பூரில் விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.