திரையரங்குகளை அதிர வைத்த டைட்டில் கார்டு! சட்டசபை ‘சைகை’ காட்சிகளுடன் ‘ஜனநாயகன்’ ரிலீஸ்..!

ஜனநாயகன்
ஜனநாயகன்source:twitter
Updated on

நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பே வெளிவந்திருக்க வேண்டியது. ஆனால், சென்சார் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக தடைபட்டது. இந்நிலையில் நடிகர் விஜய் தமிழக முதல்வராக பதவியேற்ற 75 நாட்களுக்குப் பிறகு, தற்போது இந்தப் படம் வெளியாகியுள்ளது.ஜனநாயகன் திரைப்படம், தமிழகத்தில் 1000 திரைகளிலும், இந்தியா முழுக்க 3,000 திரைகளிலும், உலகம் முழுக்க ஐந்தாயிரத்துக்கும் அதிகமான திரைகளிலும் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.

ஜனநாயகன் திரைப்படத்தின் டைட்டில் கார்டில் முதல்வர் விஜயின் சட்டசபை சைகைக் காட்சி இடம்பெற்றுள்ளது மேலும் "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்" என்ற பெயருடன் கோட் சூட் அணிந்த புகைப்படமும், எதிர்க்கட்சிகளை நோக்கி அவர் செய்த சிறப்பான சைகையும் இணைக்கப்பட்டு திரையரங்குகளில் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆரவாரத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

பல தடைகளை சந்தித்த போதிலும் கடைசியாக ஜனநாயகன் படம் இன்று ரிலீஸ் ஆனது. இந்தப் படம் நிச்சயம் சாதனை படைக்கும் என்று ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் கொண்டாடுகின்றனர்.

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் உள்ள ரசிகர்கள் விஜயின் கடைசி படமான ஜனநாயகன் படத்தை காலை 9:00 மணி காட்சியில் கூச்சல் ஆரவாரங்களுடன் பார்த்து ரசித்தனர். சிலர் தங்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகரை திரையரங்கில் கடைசி முறையாக பார்ப்பதற்காக அண்டை மாநிலங்களுக்கும் பயணம் செய்து முதல் காட்சியை பார்த்து ரசித்தனர்.

முதல்வர் சி. ஜோசப் விஜய் நடித்துள்ள கடைசித் திரைப்படமான 'ஜனநாயகன்' தடைகளைத் தாண்டி இன்று ஜூலை 23ஆம் தேதி வெளியானது. தமிழகத்தில் நேற்று இரவு முதலே ஜனநாயகன் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் கொண்டாட்டங்களில் முதல்வர் விஜயின் ரசிகர்கள் ஈடுபட்டு வந்தனர். ஒவ்வொரு திரையரங்கு முன்பாகவும் பெரும் திரளாக விஜய் ரசிகர்கள் ஒன்று கூடி ஆட்டம் பாட்டம் என மகிழ்ச்சியில் துள்ளிக் கொண்டிருக்கின்றனர். விஜயின் கடைசி திரைப்படம் இது என்பதால் இனிமேல் இப்படி எல்லாம் கொண்டாட முடியாது என்ற வருத்தத்தையும் ரசிகர்கள் வெளிப்படுத்தி உள்ளனர். சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்க வளாகத்தில் ரசிகர் ஒருவர் கார் மீது ஏறி விஜய் பேனருக்கு சூடம் காட்டினார். அவரைக் கீழே இறக்குவதற்குள் போலீசார் பெரும் பாடுபட்டு விட்டனர்.

jananayagan|கடைசித் திரைப்படம்
jananayagan|கடைசித் திரைப்படம்source:Dailythanthi

டைட்டில் கார்டில் நடிகர் விஜய் என்பதற்கு பதிலாக "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்" எனத் தமிழில் மற்றும் ஆங்கிலத்தில் பெயர் போடப்பட்டுள்ளது. சட்டசபையில் அவர் செய்த புகழ்பெற்ற சைகை மற்றும் கோட் சூட் புகைப்படம் டைட்டில் கார்டில் காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. FDFS (முதல் காட்சி) திரையரங்குகளில் ரசிகர்கள் இந்த டைட்டில் கார்டைப் பார்த்து விசில் அடித்து ஆரவாரம் செய்து வருகின்றனர்.

ஜனநாயகன் படத்தின் டைட்டில் கார்டு சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டு வருகிறது. "எல்லாவற்றையும் முடித்து விட்டோம்" என்று திமுக தலைவர் ஸ்டாலின் செய்த சைகையை சட்டசபையில் முதல்வர் விஜய் செய்து காட்டிய போட்டோ டைட்டில் கார்டில் இடம்பெற்று வருவதால் ரசிகர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்து திரையரங்கையே அதிர வைக்கின்றனர். இதனை வீடியோவாகவும் பதிவு செய்து சமூக வலைதளங்களில் விஜயின் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் என டைட்டில் கார்டில் தமிழிலும் ஆங்கிலத்திலும் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக ரசிகர்கள் "முதலமைச்சர்" என்ற தலைப்பு அட்டை தோன்றியதும் பலத்த கைத்தட்டல்கள், கூச்சல்கள், ஆரவாரங்களுடன் ஆர்பரித்து கைதட்டினர்.

நட்சத்திர நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய விஜயின் பெரிய கட் அவுட்டுகள் திரையரங்குக்கு வெளியே வைக்கப்பட்டிருந்தன. ரசிகர்கள் திரையரங்கு வெளியில் நடனம் ஆடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நடிகர் விஜய், இயக்குனர் எச். வினோத் மற்றும் கே.வி.என் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் ஆகியோர் மத்திய நிதி ஆணையத்துடன் நடத்திய ஆறு மாத காலப் போராட்டத்திற்கு ஒரு வழியாக முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் ஜனநாயகன் படம் வெளியானது. 12க்கும் மேற்பட்ட வெட்டுகள் மற்றும் மாற்றங்களுடன் இப்படம் ஏ சான்றிதழைப் பெற்று வெளியாகியது. இருப்பினும் இங்கிலாந்தில் இது எந்த வெட்டும் இல்லாமல் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
'ஜன நாயகன்' விமர்சனம்: தளபதியின் கடைசிப் படம் உண்மையிலேயே வென்றதா? முழு அலசல்!
ஜனநாயகன்
logo
Kalki Online
kalkionline.com