
2005-ம் ஆண்டில் பிரேசிலில் நடந்த மாநாட்டில், பிரித்தானியாவின் முதலாவது இந்திய அசாம் தேயிலைத் தோட்டத்தில் சீன ஒப்பந்தத் தொழிலாளர்கள் 1838-ம் ஆண்டு டிசம்பர் 15 அன்று, மேற்கொண்ட முதலாவது சம்பளப் போராட்டத்தின் நினைவாக ஆண்டு தோறும் டிசம்பர் 15 ஆம் நாளில் இந்நாளைக் கொண்டாடுவதென முடிவு செய்யப்பட்டது. முதலாவது பன்னாட்டுத் தேயிலை நாள் 2005-ம் ஆண்டு டிசம்பர் 15 அன்று, புதுதில்லியில் நடைபெற்றது.
2015 ஆம் ஆண்டில், இத்தாலியின் மிலான் நகரில் நடந்த சந்திப்பின் போது, தேயிலை பற்றிய ஐக்கிய நாடுகளின் உணவு, வேளாண்மை அமைப்பு, பன்னாட்டு தேயிலை நாள் யோசனை பற்றி விவாதிக்கப்பட்டது. அதன் பிறகு 2019 டிசம்பர் 21 அன்று கொண்டு வரப்பெற்ற தீர்மானத்தின்படி, உலகில் தேயிலை உற்பத்தியினை அதிகரிக்கும் நோக்கத்துடன் மே 21 அன்று பன்னாட்டுத் தேயிலை நாளாகக் கொண்டாடப்பட வேண்டுமென்று முடிவு செய்யப்பெற்றது. அதனைத் தொடர்ந்து, 2020-ம் ஆண்டு முதல் மே 21 அன்று உலகம் முழுவதும் பன்னாட்டுத் தேயிலை நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
தேயிலை முதலில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை சீனர்கள் மருத்துவக் குணமுள்ள மூலிகையாகவே முதலில் அறிந்திருந்தனர். பின் சீனாவிற்கு புத்த மதத்தைக்கற்க வந்த ஜப்பானிய புத்தமதத் துறவிகள் மூலமாக கி.மு 800 களில் தேயிலை ஜப்பானுக்குப் பரவியது. ஜப்பானிலிருந்து டச்சுக்காரரகள் வழியாக இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் தேயிலை அறிமுகம் ஆனது.
1840 முதல் 1850-ம் ஆண்டுகளில் இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் வரவழைக்கப்பட்ட தேயிலை இலங்கையில் சோதனை முயற்சியாக பயிரிடப்பட்டது. அதன் பிறகு, தென்கிழக்காசியா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்குத் தேயிலை பரவியது. சீனா, இலங்கை, கென்யா, துருக்கி, இந்தோனேசியா, வியட்நாம், வங்காளதேசம், மாலாவி, உகண்டா, தன்சானியா, மலேசியா போன்ற பல நாடுகளும் தேயிலையைப் பெருமளவு உற்பத்தி செய்கின்றன.
உலகம் முழுவதும் தண்ணீருக்கு அடுத்ததாக, அதிகம் பயன்படுத்தப்படும் பானமாக தேநீர் இருக்கிறது. தேநீர் உற்சாகத்தை அளிக்கும் பானமாக இருந்தாலும் சிலர் அதனை வெறும் தேநீராகக் குடிக்காமல், வடை, பிஸ்கட், ரஸ்க் என்று சிறு நொறுக்குத் தின்பண்டங்களைச் சாப்பிட்டுவிட்டு, தேநீர் குடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.
* தேநீர் நோயெதிர்ப்பு செல்களை சீர்படுத்தும் என்பதால் நோயிலிருந்து காக்க உதவுகிறது.
* பச்சைத் தேயிலைத் தேநீர் சாப்பிடுவதால் புற்று நோய் வரும் அபாயம் குறைகிறது.
* தேநீரிலிருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நம்மை இளமையாக வைத்திருக்க உதவுகிறது.
* காபியில் காணப்படும் காஃபினை விட தேநீர் கலவைகளில் 50 சதவீதத்திற்கும் குறைவாகவே காஃபின் உள்ளது.
* நாள்தோறூம் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட கப் பச்சைத் தேயிலை தேநீர் குடிப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறைகிறது.
* பச்சைத் தேயிலை தேநீர் எடை குறைப்புக்கு உதவுகிறது.
* பச்சைத் தேயிலை தேநீர் எலும்பு வலிமையை அதிகரிக்க உதவுகிறது.
என்று தேநீர் குடிப்பதால் பல நன்மைகள் இருக்கின்றன என்று சொல்லப்பட்டாலும், நாளொன்றுக்கு இரண்டு வேளை மட்டும் தேநீர் அருந்துவதுதான் சிறந்தது. இரண்டு வேளைக்கு அதிகமாகும் நிலையில், தேநீர் பசியை மாற்றி விடுகிறது. இதனால், உடலுக்குத் தேவையான உணவுகளை எடுத்துக் கொள்ள முடியாமல், பல்வேறு வயிற்றுப் பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடும் என்பதை எச்சரிக்கையாகக் கொண்டு தேநீர் அருந்துவதில் ஒரு கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பது நல்லது.