

பண்டிகை காலம் வந்து விட்டாலே பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்து விடும். அதிலும் குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருநாளுக்கு பூக்களின் விலை தாறுமாறாக உயர்வது வழக்கம். ஆனால் இம்முறை மல்லிகை பூவின் விலை கிட்டத்தட்ட ஒரு கிராம் தங்கத்திற்கு இணையாக விலை உயரப் போவதாக வியாபாரிகள் கணித்துள்ளனர்.
இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.12,800. அதேபோல் சந்தையில் இன்று ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.6,400-க்கு விற்கப்படுகிறது. தற்போது மல்லிகை பூவின் விலை கிட்டத்தட்ட ஒரு கிராம் தங்கத்தில் பாதியாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் பொங்கல் பண்டிகை அடுத்த வாரம் வர உள்ளதால், அதற்குள் ஒரு கிராம் தங்கத்திற்கு இணையாக மல்லிகை பூவின் விலையும் உயர்ந்து விடும் என பூ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது கடுமையான பனிப்பொழிவு இருப்பதால் பூக்களின் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக மல்லிகை பூ உட்பட அனைத்து பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. நேற்று சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.4,300-க்கு விற்பனையானது. ஆனால் இன்று ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.6,400-க்கு விற்கப்படுகிறது. ஒரே நாளில் மல்லிகை பூ ரூ.2,100 உயர்ந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கும் போதே, பூக்கள் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையின் போது இப்போது இருப்பதை காட்டிலும் மல்லிகை பூவின் விலை இரண்டு மடங்காக உயரும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதாவது கிட்டத்தட்ட ஒரு கிராம் தங்கத்திற்கு இணையான விலையில் ஒரு கிலோ மல்லிகைப் பூ விற்பனையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், வியாபாரிகளுக்கும் மல்லிகை பூ விவசாயிகளுக்கும் பல மடங்கு லாபத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து பூ வியாபாரிகள் கருத்து தெரிவிக்கையில், “தற்போது நிலவி வரும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக சந்தைக்கு பூ வரத்து குறைந்துள்ளது. இதனால் அனைத்து பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக மல்லிகை பூவின் விலை நாள்தோறும் ஆயிரக்கணக்கில் உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் வரும் பொங்கல் பண்டிகையின் போது ஒரு கிலோ மல்லிகை பூவின் விலை, ஒரு கிராம் தங்கத்திற்கு இணையாக விற்கப்படும் நிலை வரலாம். பூ வரத்து குறைந்திருப்பதாலும், பொங்கல் பண்டிகைக்கு பூ வியாபாரம் அமோகமாக நடைபெறும் என்பதாலும் விலை உயர்வைக் தடுக்க முடியாது” என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.