

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆணடுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அவ்வகையில் மதுரையில் புகழ்பெற்ற அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் நேற்று முடிவடைந்தன. இந்நிலையில் இன்று காலை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். சீறிவரும் காளைகளுடன் மல்லுக்கட்டும் வீரர்களை பார்க்க அலங்காநல்லூரில் பார்வையாளர்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளன. உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை வெளிநாட்டிரனரும், வெளிமாநிலத்தவரும் கண்டு களித்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 6,500 காளைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. ஆனால் இதில் தகுதி வாய்ந்த 1,100 காளைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. மேலும் 600 வீரர்கள் காளையை அடக்க களத்தில் இறங்கியுள்ளனர். முதல் சுற்றில் மஞ்சள் நிற உடையுடன் மாடுபிடி வீரர்கள் களத்தில் இறங்கினர். அதேபோல் இரண்டாம் சுற்றில் நீல நிற உடையுடனும், மூன்றாம் சுற்றில் பிங்க் நிற உடையுடனும் வீரர்கள் களத்தில் இறங்கினர்.
நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டை பார்வையிட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை புரிந்த நிலையில், இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பார்வையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தர இருக்கிறார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் காலையாக முனியாண்டி கோயில் காளை களமிறக்கப்பட்டது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கி முதலிடம் பெறும் மாடுபிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. இரண்டாம் இடம் பிடிக்கும் வீரருக்கு பைக் மற்றும் மூன்றாம் இடம் பிடிக்கும் வீரருக்கு இ-பைக் பரிசாக வழங்கப்படும்.
அதேபோல் அடங்காத காளைகளில் முதலிடம் பெறும் காளையின் உரிமையாளருக்கு டிராக்டரும், இரண்டாம் இடம் பிடிக்கும் காலையின் உரிமையாளருக்கு பைக் மற்றும் மூன்றாம் இடம் பிடிக்கும் காளையின உரிமையாளருக்கு இ-பைக் பரிசாக வழங்கப்பட உள்ளது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் சுற்றில் 105 காளைகள் களமிறக்கப்பட்டன. 16 காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். மேலும் முதல் சுற்றில் 5 வீரர்கள் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இரண்டாவது சுற்றில் 169 காளைகள் களமிறக்கப்பட்டன. இதில் 24 காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். இந்த சுற்றிலிருந்து 6 வீரர்கள் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
மூன்றாவது சுற்றில் 251 காளைகள் களமிறக்கப்பட்டன. இதில் 39 காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். இந்த சுற்றிலிருந்து 3 வீரர்கள் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
மொத்தமாக 10 முதல் 12 சுற்றுகள் வரை நடைபெறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில், ஒவ்வொரு சுற்றிலும் முன்னிலை பிடிக்கும் வீரர்கள் இறுதி சுற்றுக்கு தகுதி பெறுவார்கள்.
பைக் ஆம்புலன்ஸ்கள் 2, 108 ஆம்புலன்ஸ்கள் 12 மற்றும் ஆம்புலன்ஸ் பணியாளர்கள் 40 பேர் என மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால், அவர்கள் உடனடியாக முதலுதவிகள் அளிக்கப்பட்டு, அருகில் இருக்கும் அரசு சிறப்பு முதலுதவி மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள்.