

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில், தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளில் முன்னணி கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தற்போதைய சூழலில் தமிழ்நாட்டில் 4 முனைப் போட்டி நிலவுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தின் முன்னணி கட்சிகளான திமுக மற்றும் அதிமுக இடையே கடுமையான போட்டி நிலவில் வந்தாலும், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கடுமையான போட்டியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தவெக-வை என்டிஏ கூட்டணியில் இணைக்க பாஜக முயற்சித்து வந்தது. ஆனால் கூட்டணி தொடர்பான எவ்வித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என அக்கட்சியின் செயலாளர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
அதோடு வருகின்ற சட்டமன்றத் தேர்தலை தமிழக வெற்றிக் கழகம் தனித்தே சந்திக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார
ஒருவேளை தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைத்தால், விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமையும் என்று ஏற்கனவே அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி தமிழக வெற்றிக் கழகம் தனித்தே சட்டமன்றத் தேர்தலை சந்திக்க போவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
இருப்பினும் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு இன்னும் 12 நாட்கள் அவகாசம் இருப்பதால், அதற்குள் கூட்டணி அமைவதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்நிலையில் தலைவர் விஜய் ஆட்சி அமைக்க மூன்று ஆண்டுகளே போதுமானது என அக்கட்சியின் பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
இது குறித்த அவர் மேலும் கூறுகையில், “பேரறிஞர் அண்ணா கட்சியைத் தொடங்கி ஆட்சி அமைக்க 18 ஆண்டுகளை எடுத்துக் கொண்டார். அவருக்குப் பின் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கட்சியைத் தொடங்கி ஆட்சி அமைக்க 5 ஆண்டுகளை எடுத்துக் கொண்டார். ஆனால் எங்கள் தலைவர் விஜய் ஆட்சி அமைக்க 3 ஆண்டுகளே போதுமானது.
இதனை வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் நிரூபித்து காட்டுவோம். தமிழ்நாடு முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிறுத்தியே தற்போது ஆட்சி அமைக்க மூன்று ஆண்டுகளே போதும் என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு மற்றும் ஜனநாயகன் சென்சார் பிரச்சினை என விஜய்க்கு பல்வேறு சிக்கல்கள் தொடர்ந்து ஏற்பட்டாலும், அவரது அரசியல் வேகம் மட்டும் குறையவில்லை. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு கூட்டங்களை வெற்றிகரமாக நடத்தி, விஜய் தனது பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார்.
இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தவெக-வின் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.