

தமிழ்நாட்டில் மினரல் வாட்டர் விலை உயர்த்தப்படுவதாக சற்று முன் தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதன்படி 20 லிட்டர் மினரல் வாட்டர் கேன் ரூ.5 வரையிலும், ஒரு லிட்டர் மினரல் வாட்டர் ரூ.3 வரையிலும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சிலிண்டர் விலை உயர்த்தப்பட்ட நிலையில், சிமெண்ட் விலையும் உயரப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் இன்று குடிநீரின் விலையும் உயர்த்தப்பட்டிருப்பது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடிநீர் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் இலங்கேஸ்வரன் இது குறித்து கூறுகையில், “குடிநீர் தயாரிப்பில் மூலப்பொருட்கள் 40 சதவீதம் வரை விலை உயர்ந்து விட்டன. கடந்த 20 ஆண்டுகளாகவே மின்சார கட்டணமும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதுநாள் வரை எங்களது லாபத்தை குறைத்துக் கொண்டு பொதுமக்களுக்கு தண்ணீரை விநியோகித்து வந்தோம். ஆனால் தற்போதைய சூழலில் விலை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை.
இந்நிலையில் 20 லிட்டர் மினரல் வாட்டர் கேன் ரூ.5 வரையிலும் மற்றும் ஒரு லிட்டர் மினரல் வாட்டர் பாட்டில் ரூ.3 வரையிலும் உயர்த்தப்படுகிறது. மூலப் பொருட்களின் விலை உயர்வு, மின்சார கட்டண உயர்வு, வேலையாட்களுக்கான சம்பளம் மற்றும் போக்குவரத்து செலவு உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த விலை உயர்வு கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அம்மா குடிநீர் 10 ரூபாய்க்கும், ரயில்வே குடிநீர் 15 ரூபாய்க்கும் கிடைக்கிறது. ஆனால் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் தயாரிக்கும் குடிநீர் விலை இதனை காட்டிலும் அதிகம். இதற்கெல்லாம் முக்கிய காரணம் போக்குவரத்து செலவுதான். மாநில மற்றும் மத்திய அரசுகள் விநியோகிக்கும் குடிநீருக்கு போக்குவரத்து செலவு பெரிதாக இருக்காது.
ஆனால் நாங்கள் விநியோகிக்கும் குடிநீருக்கு தமிழகத்தின் கடைக்கோடி வரை போக்குவரத்து தேவைப்படும் என்பதால் டீசல் விலை மற்றும் ஓட்டுநர் கூலி என செலவு அதிகரிக்கிறது. இந்நிலையில் பல்வேறு செலவுகளை ஈடுகட்ட இந்த விலை உயர்வு அவசியம்” என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது கோடைகாலம் தொடங்கி இருப்பதால், குடிநீருக்கான தேவை 20% வரை அதிகரித்துள்ளது. இதனால் விநியோகஸ்தர்கள் மற்றும் டீலர்கள் விலையை உயர்த்தியுள்ளனர். தற்போது 20 லிட்டர் மினரல் வாட்டர் கேன் விலை, ஏரியாவை பொருத்து 30 முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது இந்நிலையில், இந்த விலை உயர்வு பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.