

தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி தமிழக சட்டப் பேரவை கூட்டத்தொடர் கூடியது. இதில் நடப்பாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. சட்டப்பேரவை கூட்டத் தொடரின் மூன்றாம் நாளான இன்று, போக்குவரத்து துறை ஊழியருக்கு நற்செய்தியை அறிவித்துள்ளது தமிழக அரசு.
இதன்படி போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்களின் பணப் பலன்களை வழங்க ரூ.2,446 கோடியை சிறப்பு நிதியாக ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு, பல மாதங்களாக நிலுவையில் இருந்த பணப் பலன்களை வழங்க, தமிழ்நாடு அரசு இன்று சிறப்பு நிதியை ஒதுக்கியுள்ளது. 2022 டிசம்பர் - 2023 மார்ச் வரையிலான காலத்தில் ரூ.372 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
அரசு பணிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றதும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை உள்ளிட்ட பணப்பலன்களை தமிழக அரசு வழங்கி வருகிறது.
அவ்வகையில் கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் ஓய்வு பெற்ற மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு பணப்பலன்களை வழங்க தமிழக அரசு ரூ.2,446 கோடியை ஒதுக்கி, சற்றுமுன் அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.
தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் கடந்த இரு ஆண்டுகளில் 6,867 ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். இவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி மற்றும் பணிக்கொடை உள்ளிட்ட பணப் பலன்களை வழங்க தமிழக அரசு நிதியை ஒதுக்கியுள்ளது.
தமிழக அரசின் இந்த அறிவிப்பின் மூலம் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விரைவில் அவர்களுக்கான ஓய்வூதிய பணப் பலன்கள் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டில் அரசு பேருந்து சேவைக்கான ஊக்கத்தொகை, டீசல், மகளிர் மற்றும் மாணவர்கள் பயண மானியத்தொகைக்கு ரூ.9,639 கோடி விடுவிக்கப்பட்டது. இதன் மூலம் போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கான நிலுவைத் தொகையும் விடுவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று அதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.