

பத்தாவது டி20 உலகக்கோப்பைத் தொடரில் சூப்பர் 8 சுற்றில் இந்தியா தனது இரண்டாவது போட்டியில் ஜிம்பாப்வே அணியை இன்று சென்னை சேப்பாக்கத்தில் எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழலில் களமிறங்கிய இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பைத் தக்க வைத்துள்ளது.
இதற்கு முன்னதாக மதியம் 3 மணிக்கு நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொண்டது வெஸ்ட் இண்டீஸ். இந்த இரு அணிகளும் ஏற்கனவே தங்களது முதல் சூப்பர் 8 போட்டியை வென்றிருந்தது.
இந்நிலையில் இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வென்றால், இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்பதால் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் இந்தப் போட்டியை ஆர்வத்துடன் பார்த்தனர். ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா இந்திய அணியின் இன்னிங்ஸைத் தொடங்கினர். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வந்த இந்திய அணியில் சஞ்சு சாம்சன் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதனைத் தொடர்ந்து இஷான் கிஷனுடன் ஜோடி சேர்ந்த அபிஷேக் ஷர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்த உலக கோப்பையில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். பிறகு அபிஷேக் ஷர்மா 55, இஷான் கிஷன் 38, சூரியக்குமார் யாதவ் 33 ரன்களில் அவுட் ஆகி வெளியேற, கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்டியா மற்றும் திலக் வர்மா அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 256 ரன்களை எடுத்தது. பாண்டியா 50 ரன்களுடனும், திலக் வர்மா 40 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களததில் இருந்தனர். ஜிம்பாப்வே தரப்பில் சிக்கந்தர் ராஸா, முசரபாணி, நகர்வா மற்றும் மபோசா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
257 என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி களம் இறங்கிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர்கள் ஆரம்பத்தில் பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தனர். 20 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணியால் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
இதனால் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக பெண்ணட் 97 ரன்களும், கேப்டன் ராஸா 31 ரன்களும் எடுத்தனர். இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அடுத்ததாக வருகின்ற மார்ச் 1 ஆம் தேதி கடைசி சூப்பர் 8 போட்டியில் இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை இந்தப் போட்டி மழை காரணமாக நடக்காமல் போனால், ரன்ரேட் அடிப்படையில் வெஸ்ட் இண்டீஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறும்.