தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த சில மாதங்களாக உச்சத்தை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடப்பாண்டில் ரூ.1 லட்சத்தைக் கடந்த தங்கத்தின் விலை, கடந்த சில நாட்களாக ஏறுவதும் இறங்குவதுமாகவே இருக்கிறது.
கடந்த வாரத் தொடக்கத்தில் உயர்வை நோக்கிய தங்கத்தின் விலை, அதன்பிறகு விலையில் மாற்றமின்றி தொடர்ந்தது. கடந்த 4 நாட்களாக தங்கத்தின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.14,150-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,200-க்கும் விற்பனையானது.
கடந்த 3 நாட்களாக வெள்ளி விலையிலும் மாற்றமின்றி ரூ.280-க்கு விற்பனையானது.
சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்கள், டாலர் சரிவு, பங்குச்சந்தை சரிவு மற்றும் உலகளாவிய போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலையில் தினந்தோறும் மாற்றம் ஏற்படுகிறது.
குறிப்பாக அமெரிக்காவின் நடவடிக்கைகள் தங்கத்தின் விலையை அதிகம் பாதிக்கிறது. தங்கத்தின் தொடர் விலையேற்றத்தால், சாமானியர்களுக்கு தங்கம் எட்டாக்கனியாக மாறி விடுமோ என்ற அச்சமும் நிலவுகிறது. ஆனால் அமெரிக்க டாலர் சரிவால் தங்கத்தில் மாற்று முதலீடு செய்தவர்களுக்கு, இந்த விலை உயர்வு லாபத்தைக் கொடுத்துள்ளது.
இந்நிலையில் நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், இன்று (மே 11) தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.400 குறைந்து, ரூ.1,12,800-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.50 குறைந்து ரூ.14,100-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 அதிகரித்து, ரூ.285-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 அதிகரித்து ரூ.2,85,000-க்கு விற்பனையாகிறது.
கடந்த நான்கு நாட்களாக மாற்றமில்லாமல் விற்பனையான தங்கத்தின் விலை, வாரத்தின் முதல் நாளான இன்று ரூ.400 குறைந்து விற்பனையாவது இல்லத்தரசிகளுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது