

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் கடுமையான போர் நடந்து வருகிறது. போர் பதற்றம் காரணமாக ஹார்மூஸ் நீரிணையை ஈரான் அரசு மூடியதால், உலக நாடுகளுக்கு எரிபொருள் விநியோகம் செய்வதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
உலக நாடுகளுக்கு விநியோகம் செய்யப்படும் கச்சா எண்ணெயில் 80%, ஹார்மூஸ் நீரிணை வழியாகத் தான் அனுப்பப்படுகிறது. தற்போது இந்த நீரிணை மூடப்பட்டு இருப்பதால், கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
கடந்த வாரம் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 119.5 டாலரை எட்டிய நிலையில், விரைவில் போர் முடிவுக்கு வரும் என்ற அமெரிக்கா அதிபரின் அறிவிப்புக்குப் பிறகு 80 டாலராக குறைந்தது. போர் தீவிரமடைந்து வரும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 100 டாலரை எட்டியுள்ளது.
இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை உயர்வைத் தடுக்கும் வகையில், அமெரிக்கா தனது அவசர கால சேமிப்பிலிருந்து 172 பீப்பாய் கச்சா எண்ணையை பொது சந்தையில் வெளியிடப் போவதாக அதிபர் டிரம்ப் அதிரடியான அறிவிப்பை இன்று அறிவித்துள்ளார்.
கச்சா எண்ணெயின் விலை உயர்வால் உலக நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் உயர்ந்து வருகிறது. அவசர கால சூழலில் பயன்படுத்துவதற்கு ஏற்கனவே அமெரிக்கா 415 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை பிரம்மாண்ட குகையில் சேமித்து வைத்துள்ளது.
தற்போதைய சூழலில் இந்த கச்சா எண்ணெயை விடுவித்தால் உலக நாடுகளுக்கு உதவியாக இருக்கும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கூறப்பட்டது. ஆனால் எங்களிடம் உள்ள அவசர கால தேவைக்கான கச்சா எண்ணெயை உலக சந்தையில் விடுவிக்கும் எண்ணம் தற்போது இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
ஆனால் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை உயர்வைத் தடுக்க வேறு வழியின்றி அமெரிக்கா களத்தில் இறங்கியுள்ளது. இதன்படி தற்போது அவசர கால சேமிப்பில் இருந்து 172 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணையை உலக சந்தையில் வெளியிட முன்வந்துள்ளது அமெரிக்கா.
அமெரிக்காவுடன் இணைந்து, 32 உறுப்பு நாடுகளைக் கொண்ட சர்வதேச எரிசக்தி நிறுவனம் 400 பீப்பாய் கச்சா எண்ணையை உலக சந்தையில் வெளியிட உள்ளது. இதன் காரணமாக உலக நாடுகளுக்கு தற்போதைக்கு கச்சா எண்ணெய் பகிர்ந்தளிக்கப்பட உள்ளது.
இருப்பினும் இதுவொரு தற்காலிகமான தீர்வு எனவும், போர் முடிவுக்கு வருவது மட்டுமே நிரந்தர தீர்வாக இருக்கும் எனவும் கருதப்படுகிறது.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வந்தாலும், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்னும் உயரவில்லை. தற்போது வரை எல்பிஜி சிலிண்டர் மட்டுமே ரூ.60 உயர்ந்துள்ளது. ஆனால் பொதுமக்கள் பலரும் பெட்ரோல், டீசல் விலை உயரும் எனக் கருதி பெட்ரோல் பங்குகளில் குவிய தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பான வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
மேலும் வதந்திகளை நம்பி, மக்கள் தேவையின்றி பீதியடைய வேண்டாம்; போதுமான அளவு பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்பு உள்ளது என இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனமும் தெரிவித்துள்ளது