

தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அரசியல் கட்சிகள் தீவிரமான பிரச்சாரத்தை முன்னெடுத்து வரும் நிலையில், 4 முனைப் போட்டியாக இந்தத் தேர்தல் பார்க்கப்படுகிறது.
நான்கு முனைப் போட்டி தான் என்றாலும் என்டிஏ கூட்டணிக்கும், திமுக கூட்டணிக்கு மட்டுமே போட்டி என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரம் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. இந்நிலையில் நேற்று அக்கட்சியின் தலைவர் விஜய் முழு தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டார்.
தவெக-வின் தேர்தல் அறிக்கை பலரையும் கவர்ந்துள்ள நிலையில், தவெக-வின் தேர்தல் அறிக்கை பற்றி எங்களுக்கு கவலை இல்லை எனவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய நயினார் நாகேந்திரன், “நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் - திமுக கூட்டணிக்கும் தான் கடுமையான போட்டி நிலவுகிறது. தவெக உள்ளிட்ட மற்ற கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டால் எங்களுக்கு கவலையில்லை. தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு எவ்வித பாதிப்பும் நேராது. தமிழ்நாட்டிலும் தொகுதிகளின் எண்ணிக்கை உயரும்” என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.