

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போரில் முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியைத் தழுவிய நிலையில், வருகின்ற வியாழக்கிழமை ஏப்ரல் 16ஆம் தேதி இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெயை விநியோகம் செய்ய ஹார்மூஸ் ஜலசந்தி முக்கிய கடல் வழி பாதையாக திகழ்கிறது. கடந்த 40 நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் போர் காரணமாக, ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் உலக நாடுகளில் எரிசக்தி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
முதல் கட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு, ஈரான் துறைமுகத்திற்கு செல்லும் கப்பல்கள் அனைத்தும் முற்றுகை இடப்படும் என நேற்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இந்நிலையில் இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
வருகின்ற ஏப்ரல் 16ஆம் தேதி இஸ்லாமாபாத் அல்லது ஜெனிவாவில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடக்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும் வருகின்ற ஏப்ரல் 21 ஆம் தேதிக்குள் இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர சவூதி அரேபியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் தீவிரமாக உள்ளன.
அமெரிக்க தரப்பிலிருந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வருவதாக ஈரான் தரப்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வருகின்ற வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது