

அடுத்த வாரம் பொங்கல் பண்டிகை வர உள்ளதால் இந்த வார இறுதியில் இருந்தே பொதுமக்கள் பலரும் சொந்த ஊருக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு, அதற்கான முன்பதிவு நேற்று தொடங்கியது.
இந்நிலையில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளும் இன்று முதல் ஜனவரி 14ஆம் தேதி வரை இயக்கப்படுகிறது. வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 10,245 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலும் பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு செல்பவர்கள், வெள்ளிக்கிழமை இரவு, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கிளம்புவார்கள் என்பதால் இன்று முதல் சிறப்பு பேருந்துகளை தமிழ்நாடு போக்குவரத்து துறை இயக்குகிறது.
சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு தினசரி 12,552 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 10,245 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன.
கூடுதலாக இயக்கப்படும் பேருந்துகளின் மூலம், பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சிரமமின்றி பயணிக்க முடியும். சிறப்பு பேருந்துகள் உட்பட மொத்தம் 22,797 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதால், பேருந்து பயணிகளுக்கு வசதியாக இருக்கும் என தமிழ்நாடு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் இருந்து சுமார் 11.35 லட்சம் பேர் சொந்த ஊருக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், அதற்கேற்றவாறு சிறப்பு பேருந்துகளின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் சிறப்பு பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.
இன்று (ஜனவரி 9) 3,142 பேருந்துகளும், நாளை (ஜனவரி 10) 3,122 பேருந்துகளும், நாளை மறுதினம் (ஜனவரி 11) 2,347 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. பொங்கல் பண்டிகை முடிந்து பயணிகள் மீண்டும் சென்னைக்கு திரும்பும் வகையில், ஜனவரி 16ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வழக்கமாக 8,368 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்குத் திரும்பும் பயணிகளின் வசதிக்காக 6,820 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரம் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
1. கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து கடலுார், புதுச்சேரி, சிதம்பரம், திருச்சி, மதுரை, செங்கோட்டை, சேலம், திருநெல்வேலி, கும்பகோணம், தூத்துக்குடி மற்றும் தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
2. கிளாம்பாக்கம் வளாகத்தில் உள்ள மற்றொரு பேருந்து முனையத்தில் இருந்து திருவண்ணாமலை போளூர் மற்றும் வந்தவாசி செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
3. கோயம்பேட்டில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக காஞ்சிபுரம், வேலுார், திருத்தணி மற்றும் பெங்களூரு செல்லும் வழித்தட பேருந்துகள் இயக்கப்படும்.
4. மாதவரம் பேருந்து முனையத்தில் இருந்து பொன்னேரி மற்றும் ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா மாநிலம் செல்லும் பேருந்துகளும், வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகளும் இயக்கப்படும்.
உதவி எண்கள்:
ஆன்லைன் முன்பதிவு: www.tnstc.in
ஆன்லைன் முன்பதிவு வாட்ஸ்அப்: 94440 18898
அரசு பேருந்து இயக்கம் தொடர்பான புகார் தெரிவிக்க: 94450 14436
தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால்: 044-24749002, 044-26280445, 1800 425 6151.