
இந்தியாவில் இன்றும் கூட பல இல்லத்தரசிகள் அன்றாட செலவுகளுக்குக் கூட பிறரை சார்ந்திருக்க வேண்டிய நிலையே உள்ளது. எனவே, இத்தகைய நிலையை போக்கி பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழி வகுத்துக் கொடுப்பதற்காக தமிழ்நாடு அரசு கொண்டு வந்த திட்டம் தான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்(Kalaignar Magalir Urimai Thogai).
இந்த திட்டத்தின் மூலம் குடும்ப ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் குடும்ப தலைவிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் மாதந்தோறும் 15?ம் தேதி ரூ.1000 பணம் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது.
மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிப்பவர்களில் தகுதியானவர்களை மட்டும் அடையாளம் கண்டு ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு கட்டாயம் ரூ.1000 கொடுக்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் தற்போது ஒரு கோடியே 14 லட்சம் பெண்கள் பயனாளிகளாக உள்ளனர்.
தற்போது நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் மூலமாக இதுவரை மகளிர் உரிமைத்தொகைக்காக மட்டும் சுமார் 17 லட்சம் மனுக்கள் வந்திருப்பதாகவும், இந்த மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ள நிலையில், கடந்த ஜூலை மாதம் 15-ம்தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பித்த பெண்களின் விண்ணப்பங்களை அரசு தற்போது தீவிரமாக பரிசீலித்து வருவதாக கூறப்பட்டது.
இந்நிலையில் திட்டத்தில் சேருவதற்கு புதிதாக லட்சக்கணக்கான பெண்கள் விண்ணப்பித்து வரும் அதேவேளையில், ஏற்கனவே பயனாளிகளாக இருக்கும் பெண்கள் பலர் நீக்கப்பட்டுள்ள சம்பவம் பலரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
அதாவது மத்திய, மாநில அரசுப் பணியில் இருப்பவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மற்றும் ஆண்டுக்கு 2.5 லட்சத்துக்கும் அதிகமான ஓய்வூதியம் பெறுபவர்களின் குடும்பத்தினரும் இந்த திட்டத்தில் பயனாளியாக இருக்க முடியாது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், கடந்த ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு நடத்திய TNPSC குரூப் 2, 2ஏ, குரூப் 4 மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு அவர்கள் தங்களது பணிக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமின்றி அண்மையில், குரூப் 1 தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
அந்த வகையில் TNPSC தேர்வுகளில் வெற்றி பெற்று அரசுப் பணி நியமன ஆணையினை பெற்றவர்கள் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் விதிகளின் படி ரூ.1,000 பெற தகுதியானவர்கள் கிடையாது. அதனால் இதற்கு முன்பு மகளிர் உரிமைத் தொகை பெற்று வந்த இந்த குடும்பத்தை சேர்ந்த பெண்களின் பெயர்கள் இந்த திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டு வருகிறது. எனவே இனிமேல் TNPSC நடத்திய தேர்வுகளில் வெற்றி பெற்று இப்போது பணி நியமன ஆணைகளைப் பெற்றவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்களுக்கு இந்த மாதத்தில் இருந்து 1,000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை வழக்கப்பட மாட்டாது.
அத்தகைய பெண் பயனாளிகளின் பெயர்கள் கண்டுபிடிக்கும் பணியை சமூகநலத்துறை அதிகாரிகள் தற்போது மேற்கொண்டு வருவதால் இப்போது கலைஞர் மகளிர் உதவி தொகையை பெற்று வரும் ஆயிரக்கணக்கான பெண் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகளவில் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.