

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் அல்லது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (kalaignar magalir urimai thogai) என்பது தமிழ்நாட்டின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் உரிமைத் தொகையாக 1000 ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் தமிழ்நாடு அரசுத் திட்டமாகும்.
2021ம் ஆண்டு திமுக அரசு பதவியேற்றதும் அறிமுகம் செய்யப்பட்ட இந்த திட்டம், முதலில் அனைத்து பெண்களுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பின்னர் தகுதி வாய்ந்த பெண்களுக்கு மட்டும் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இதனால் பலரும் அதிருப்தி அடைந்தனர். இருப்பினும் கடந்த 4 ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தின் மூலம் மாதந்தோறும் சுமார் 1.14 கோடி பெண்களுக்கு 1,000 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து விடுபட்ட, தகுதிவாய்ந்த அனைத்து பெண்களும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்த நிலையில் விடுபட்ட ஏராளமான குடும்ப தலைகளும், பெண்களும் தொடர்ந்து விண்ணப்பித்து வந்தனர்.
அதற்காக தமிழ்நாடு முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின் முகாம்’கள் மூலம் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது. கடந்த நவம்பர் 14-ம் தேதியுடன் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் முழுமையாக நிறைவடைந்த நிலையில், இந்த முகாம்களின் மூலம் இதுவரை சுமார் 28 லட்சம் பெண்கள் மகளிர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்துள்ளனர்.
ஆனால், ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு கிடைக்கும் என்று கூறப்பட்ட நிலையில், இதுவரை விண்ணப்பம் பெற்றவர்களில் யாருக்கும் உரிமைத் தொகை வரவு வைக்கப்படவில்லை என்பதால் பலருக்கும் தங்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில் திருவள்ளூரில் ரூ.1,471 கோடியிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்து பேசிய துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விடுபட்ட அனைத்து மகளிருக்கும் வருகிற 15-ந்தேதி முதல் உரிமைத் தொகையாக மாதந்தோறும் ரூ.1000 நிச்சயம் வந்து சேரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதனால் எப்போது மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும் என்று ஆவலோடு காத்திருந்த பெண்கள் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த அறிவிப்பை கேட்டு மிகவும் சந்தோஷமடைந்துள்ளனர்.
இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை சுமார் 1.14 கோடி பெண் பயனாளிகளுக்கு ரூ.30,000 கோடிக்கு மேல் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.