

பெண்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து அதை திறம்பட செயல்படுத்தியும் வருகிறது. அந்த வகையில் ஏழை பெண்கள் பொருளாதார ரீதியாக வாழ்வில் உயர கொண்டு வரப்பட்ட கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தற்போது வரை 1.14 கோடிக்கும் அதிகமான மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
இந்த உரிமைத்தொகை இதுவரை கிடைக்காத தகுதி வாய்ந்த மகளிர் அனைவருக்கும் வழங்க அரசு முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் மூலம் விடுபட்ட குடும்ப தலைவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்குவதற்கான முகாம் தமிழ்நாடு முழுவதும் சமீபத்தில் நடைபெற்றது. இந்த முகாம்களில் இதுவரை சுமார் 28 லட்சம் பெண்கள் மகளிர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்துள்ளனர்.
ஒருவேளை இதுவரை தகுதியான பெண்கள் யாரேனும் மகளிர் உரிமைத்தொகை வேண்டி விண்ணப்பிக்காமல் இருந்தால் உங்கள் மாவட்டத்தில் நடக்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்து கொண்டு உடனடியாக விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது. ஏனெனில் வரும் நவம்பர் 14-ம் தேதியுடன் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் முழுமையாக நிறைவடைய உள்ளது.
ஆனால், ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகால் மூலம் இதுவரை விண்ணப்பம் பெற்றவர்களில் யாருக்கும் உரிமைத் தொகை வரவு வைக்கப்படவில்லை என்பதால் பலருக்கும் தங்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் மூலம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு பெறப்பட்ட புதிய விண்ணப்பங்கள் மீது தற்போது கள ஆய்வு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தகுதியுள்ள புதிய பயனாளிகளின் பட்டியல் நவம்பர் 30க்குள் இறுதி செய்யப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதன் பிறகு தகுதியுள்ள புதிய பயனாளிகளுக்கு வரும் டிசம்பர் மாதம் 15-ம் தேதி முதல் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை சுமார் 1.14 கோடி பெண் பயனாளிகளுக்கு ரூ.30,000 கோடிக்கு மேல் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.