
பெண்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து திறம்பட செயல்படுத்தி வருகிறது. மகளிர் உரிமை, தோழி விடுதிகள், விடியல் பயணம், புதுமைப்பெண் போன்ற புதிய, புதிய திட்டங்களை நிறைவேற்றி மகளிர் நலன்களை மேம்படுத்துவதில் தமிழக அரசு இந்தியாவுக்கே வழிகாட்டி வருகிறது. ஏழை பெண்கள் பொருளாதார ரீதியாக வாழ்வில் உயர கொண்டு வரப்பட்ட கலைஞர் உரிமை திட்டம் மக்களால் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. கடந்த 2023 செப்டம்பர் 15-ந்தேதி இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 1.50 கோடி பெண்களின் வங்கி கணக்கில் மாதந்தோறும் 15-ம்தேதி ரூ.1,000 நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை ஆரம்பித்த தொடக்கத்தில் அனைவருக்கும் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், பின்னர் அது தகுதியுள்ள மகளிருக்கு மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதால் சிலர் பயன்பெற முடியாமல் போய் அதிருப்தி எழுந்தது.
இதற்கிடையே தகுதி இருந்தும் தங்களது விண்ணப்பங்கள் புறக்கணிக்கப்பட்டதாக ஏராளமான மகளிர் குறை சொல்லி வந்த நிலையில் தற்போது தகுதி வாய்ந்த அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். அதனை தொடர்ந்து மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுப்பட்டவர்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம் மாநிலம் முழுவதும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பெறப்பட்ட விண்ணப்பங்கள் ஆய்வுக்குழு மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருவதுடன், விண்ணப்பித்தவர்களுக்கு 45 நாட்களுக்குள் பதில் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் விண்ணப்பித்து 45 நாட்களுக்கு மேல் ஆனவர்கள் இதுவரை தங்களுக்கு தகவல் ஏதும் வராததால் மகளிர் உரிமைத்தொகை கிடைக்குமா கிடைக்காதா என்ற கேள்வி குடும்ப தலைவிகளிடையே எழுந்துள்ளது. இந்நிலையில், பெறப்பட்ட புதிய விண்ணப்பங்களை பற்றி நேரடியாக கள ஆய்வு நடத்தி மகளிர் உரிமை தொகை பெற அவர்கள் தகுதியானர் தானா என்பதை கண்டறிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தக் கள ஆய்வில், ஒவ்வொரு விண்ணப்பத்தையும் அரசு அலுவலர்கள் நேரடியாக அவர்களது வீட்டிற்கே சென்று ஆய்வு செய்ய உள்ளனர்.
இந்த கள ஆய்வில் விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள சொந்த வீடு அல்லது வாடகை வீடு, மொபைல் எண், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் ஆய்வு செய்யப்படும். மேலும், பெண் பயனாளிகளின் பொருளாதார வரம்பு, மகளிர் உரிமைத் தொகை விதிமுறைகள் அவர்களுக்கு பொருந்துமா என்பது குறித்தும் களஆய்வு செய்யப்படும். விண்ணப்பத்தில் கூறியிருந்தபடி அனைத்து விவரங்களும் சரியாக இருந்தால், அவர்களுக்கு ஜனவரி மாதத்தில் இருந்து மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அரசு அலுவலர்கள் நாள்தோறும் குறைந்தது 100 விண்ணப்பங்களை கள ஆய்வு செய்து அதற்கான செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், கள விசாரணை குறித்த அறிக்கையை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் தினசரி மாலை 6 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 15-ம் தேதி முதல் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் இதுவரை 17 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் மகளிர் உரிமை தொகை வேண்டி விண்ணப்பித்துள்ளனர். இந்த சூழலில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு புதிதாக விண்ணப்பித்த மனுகளின் மீதான பரிசீலனையை தற்போது தமிழக அரசு தொடங்கியுள்ளது. விரைவில் கள ஆய்வு முடிந்து வரும் ஜனவரி மாதத்தில் இருந்து மகளிர் உரிமைத் தொகை படிப்படியாக தகுதி வாய்ந்த பெண்களுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.