
பெண்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து திறம்பட செயல்படுத்தி வருகிறது. மகளிர் உரிமை, தோழி விடுதிகள், விடியல் பயணம், புதுமைப்பெண் போன்ற புதிய, புதிய திட்டங்களை நிறைவேற்றி மகளிர் நலன்களை மேம்படுத்துவதில் தமிழக அரசு இந்தியாவுக்கே வழிகாட்டி வருகிறது. ஏழை பெண்கள் பொருளாதார ரீதியாக வாழ்வில் உயர கொண்டு வரப்பட்ட கலைஞர் உரிமை திட்டம் மக்களால் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. கடந்த 2023 செப்டம்பர் 15-ந்தேதி இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 1.15 கோடி மகளிரின் வங்கி கணக்கில் மாதந்தோறும் ரூ.1,000 நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
இந்த திட்டத்தால் பெண்களுக்கு வீட்டு பட்ஜெட்டுக்கு பெரும் உதவியாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக சிலிண்டர் வாங்கவும், குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் வாங்க உதவுவதாகவும் பெண்கள் தெரிவித்துள்ளனர். ஆதரவின்றி தவிக்கும் வயதான பெண்களுக்கு இந்த மாதந்திர உதவித்தொகை வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
இந்த உரிமைத்தொகை இதுவரை கிடைக்காத தகுதி வாய்ந்த மகளிர் அனைவருக்கும் வழங்க அரசு முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுப்பட்டவர்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம் மாநிலம் முழுவதும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பெறப்பட்ட விண்ணப்பங்கள் ஆய்வுக்குழு மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருவதுடன், விண்ணப்பித்தவர்களுக்கு 45 நாட்களுக்குள் பதில் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வரும் 20-ம்தேதி தீபாவளி பண்டிகை வருவதால் இதற்குள் மகளிர் உரிமைத் தொகைக்காக புதிதாக விண்ணப்பித்தவர்கள் தங்களுக்கு பணம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், கூடிய விரைவில் தகுதியானவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கும் போது ஆதார் கார்டு, வங்கி கணக்கு அட்டை நகல் மற்றும் மொபைல் எண் ஆகியவை கொடுக்க வேண்டிய முக்கிய ஆவணங்களாகும்.
இந்த ஆவணங்களில் ஏதாவது தவறு இருந்தாலும் உங்களுக்கு இந்த தொகை கிடைப்பதில் பிரச்சனை ஏற்படலாம். அப்படி ஒரு சம்பவம் தற்போது நடந்துள்ளது.
அதாவது, தமிழகத்தை சேர்ந்த பெண்ணின் ஆதார் எண் அடிப்படையில், வங்கிக்கணக்கு தொடங்கிய உத்தரபிரதேசத்தை சேர்ந்த பெண்ணுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைத்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த பெண்ணின் ஆதார் எண் அடிப்படையில் உத்தரபிரதேச பெண் வங்கி கணக்கு தொடங்கியுள்ளார். இதனால் தமிழக பெண்ணுக்கு கிடைக்க வேண்டிய மகளிர் உரிமைத்தொகை, உத்தரபிரதேச பெண்ணின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
எனவே இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க விண்ணப்பிக்கும் போது ஆதார் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை முழுமையாக சரிப்பார்த்த பின்னர் விண்ணப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு வேளை இதுபோன்று நீங்கள் கொடுக்கும் ஆவணங்களில் தவறானதாக இருந்தால் உங்கள் மொபைலுக்கு 1000 ரூபாய் பணம் வந்துவிட்டதாக மெசேஜ் வரும் ஆனால் உங்கள் வங்கிக்கணக்கில் பணம் வராது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.