
பூமியில் உள்ள ஏழு கண்டங்களின் ஏழு உயரமான சிகரங்களை தொட்ட உலகின் மிக இளம் பெண் என்ற சாதனையை மும்பையை சேர்ந்த பள்ளி மாணவி காம்யா படைத்துள்ளார்.
காம்யா மும்பையில் உள்ள நேவி சில்ட்ரன் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கிறார். சிறு வயதில் இருந்தே மலை ஏற்றங்களில் ஆர்வம் கொண்ட காம்யா எப்போதும் சாகசம் நிறைந்த பயணங்களை விரும்பி மேற்கொள்கிறார். அவருக்கு எப்போதும் உறுதுணையாக அவரது தந்தை இருக்கிறார்.
காம்யா தனது மூன்று வயதில் லோனாவாலாவில் மலையேற்ற பயிற்சிகளை தொடங்கினார். தனக்கு ஒன்பது வயது ஆகும் போது உத்தரகாண்டில் உள்ள 5020 மீ உயரமுள்ள ரூப்குண்ட் சிகரத்தை எட்டினார். ஒரு வருடம் கழித்து, அவர் நேபாளத்தில் உள்ள எவரெஸ்ட் அடிப்படை முகாமை அடைந்தார் (5,346 மீட்டர்) பின்னர் லடாக்கில் உள்ள ஸ்டோக் காங்க்ரி (6,153 மீட்டர்) மலை சிகரத்தில் ஏறிய சிறுமி ஆனார்.
12 வயது முடியும் முன்னரே காம்யா இதுவரை ஆப்பிரிக்காவின் உயரமான சிகரமான கிளிமஞ்சாரோ, ஐரோப்பாவின் உயரமான சிகரமான எல்ப்ரஸ், ஆஸ்திரேலியாவின் உயரமான சிகரமான கோஸ்கியுஸ்கோ, தென் அமெரிக்காவில் உள்ள உயரமான சிகரமான அகோன்காகுவா, வட அமெரிக்காவின் உயரமான சிகரமான டெனால் ஆகிய சிகரங்களில் ஏறி சாதனைப் படைத்துள்ளார்.
தற்போது 16 வயதாகும் காம்யா, இந்த ஆண்டு மே மாதம், உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட்டில் ஏறி சாதனைப் படைத்தார். இந்த சாதனைக்குப் பிறகு, அவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய உலகின் இரண்டாவது இளைய பெண் ஆனார். இந்தியாவிலிருந்து எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் இளம்பெண் என்ற பெருமையும் பெற்றார்.
அனைத்து கண்டங்களிலும் உயரமான சிகரங்களில் ஏறிய வயது குறைந்த பெண் காம்யா தான். கடந்த டிச.24 அன்று சிலி நேரப்படி மாலை 3.20 மணிக்கு பனி மூடிய அண்டார்டிகா கண்டத்தில் உள்ள உயரமான சிகரமான வின்சென்ட் மலையின் உச்சியை காம்யா அடைந்தார். வின்சென்ட் மலையில் ஏறும் முதல் பள்ளி மாணவி என்ற சாதனையையும் காம்யா படைத்துள்ளார்.
இந்த கடினமான பயணத்தின் போது அவரது தந்தை கார்த்திகேயனும் உடன் சென்றார். காம்யாவின் தந்தை இந்திய கடற்படையில் தளபதியாக பணிபுரிகிறார்.
இந்த வெற்றிக்காக நேவி சில்ட்ரன் பள்ளி மாணவி காம்யாவிற்கு இந்திய கடற்படை சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. காம்யாவின் தந்தையை கடற்படை தளபதி கார்த்திகேயனுக்கும் அவர்கள் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். காம்யா இப்போது வட துருவம் மற்றும் தென் துருவத்தை அடைவதற்கான சாகச இலக்கான எக்ஸ்ப்ளோரர்ஸ் கிராண்ட் ஸ்லாம் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
காம்யா இந்திய அரசின் சிறுவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ராஷ்ட்ரிய பால் சக்தி புரஸ்கார் விருதும் பெற்றவர்.