

காஞ்சிபுரம் பட்டுப் புடவை என்பது இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம் பகுதியில் தயாரிக்கப்படும் ஒரு வகை பட்டுப் புடவை ஆகும். இது இந்தியாவின் பாரம்பரியம். இந்த பாரம்பரிய புடவைக்கு அழகு சேர்ப்பது தங்கம், வெள்ளி ஜரிகைகள் தான். காஞ்சிபுரம் பட்டுப்புடவையை இந்தியாவில் உள்ள அனைத்து மாநில பெண்களும் விரும்பி அணிகின்றனர்.
இந்தியாவில் ஒரு திருமணமாக இருந்தாலும் சரி, சம்பிரதாய நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, கலாச்சார விழாவாக இருந்தாலும் சரி, பெண்கள் விரும்பி அணிவது காஞ்சிபுரம் பட்டுப் புடவையை தான். கல்யாண வீடுகளில் காஞ்சிபுரம் பட்டு உடுத்தி அழகாக வலம் வரும் பெண்களுக்கு மரியாதையே தனிதான். அதேபோல் ஒரு தென்னிந்திய திருமணத்தில் மணமகளின் உடையை எடுத்துக்கொண்டால் காஞ்சிபுரம் சேலை இல்லாமல் முழுமையடையாது.
இந்த புடவைகளில் பார்டர்கள் மற்றும் பல மாறுபட்ட நிறத்தில் கனமான தங்க நெசவு உள்ளது. காஞ்சிபுரம் புடவைகள் பாரம்பரியமாக எளிய தங்கக் கோடுகள் அல்லது தங்கப் புள்ளிகளைக் குறிக்கும் வடிவமைப்புகளைக் கொண்டிருந்தன. ஒரு உண்மையான காஞ்சிபுரம் பட்டுப் புடவையில், புடவை மற்றும் பல்லுவின் உடலும் தனித்தனியாக நெய்யப்பட்டு, பின்னர் ஒன்றாக தைக்கப்படுகின்றன.
குறைந்த விலை, எடை குறைந்த புடவைகள், எளிமையான டிசைன்கள் மற்றும் வெளிர் நிறங்களுக்கு நுகர்வோர் விருப்பம் அதிகரித்துள்ளதால், காஞ்சிபுரம் சேலையில் பல மாற்றங்கள் இணைக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் புடவைகள் வேலையின் நுணுக்கம், வண்ணங்கள், வடிவங்கள், ஜரி (தங்க நூல்) போன்ற பொருள்களைப் பொறுத்து விலையில் பரவலாக வேறுபடுகின்றன. கனமான பட்டு மற்றும் தங்கத் துணியால் நெய்யப்பட்ட காஞ்சிபுரம் புடவைகள் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்பட்டுகிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் உயர்ந்து வருவதாலும், உற்பத்திச் செலவுகளின் உயர்வாலும் பாரம்பரிய பொக்கிஷமான காஞ்சிபுரம் பட்டுப்புடவைகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு விலை உயர்ந்துள்ளன.
பாரம்பரிய காஞ்சிபுரம் பட்டுப்புடவைக்கு அழகு சேர்ப்பது தங்கம், வெள்ளியால் ஆன ஜரிகைகள் தான். காஞ்சிபுரம் பட்டுச் சேலையில் பயன்படுத்தப்படும் ஜரிகையின் அளவை பொறுத்து அதன் விலை அதிகரித்து உள்ளது. சிக்கலான ஜரிகை வேலைப்பாடுகளுக்குப் பெயர் பெற்ற ஒவ்வொரு காஞ்சிபுரம் புடவையும் 0.5% தங்கம், 40% வெள்ளி, 35.5% தாமிரம் மற்றும் 24% பட்டு நூல்களின் கலவையால் நெய்யப்படுகின்றன.
இவை அனைத்தும் அந்த புடவைக்கு நேர்த்தியையும் ஆடம்பரத்தையும் தருகிறது. ஆனால் தங்கமும், வெள்ளியும் கடந்த 2 மாதங்களாகவே வரலாறு காணாத விலை உயர்வை கண்டுள்ள நிலையில், அதன் தாக்கம் காஞ்சிபுரம் பட்டுச்சேலையிலும் எதிரொலித்து வருகிறது.
ஆனால் தற்போது தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ₹90,000 ஐத் தாண்டியதும், வெள்ளியின் விலை ஒரு கிலோவுக்கு ₹1.65 லட்சத்தைத் தொட்டுள்ளதால், ஒரு புடவையை நெசவு செய்வதற்கான செலவு கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி பட்டுப்புடவையின் ஜரிகையில் தங்கம் மற்றும் வெள்ளியின் அளவை குறைக்க முடியாததால் அதன் விலை அதிகரித்துள்ளது.
ஒரு காலத்தில் ₹10,000 முதல் ₹12,000 வரை மலிவு விலையில் கிடைத்த ஒரு எளிய பட்டுப்புடவை கூட இப்போது ₹20,000ல் தான் தொடங்குகிறது, அதே நேரத்தில் செழுமையான தங்கம் மற்றும் வெள்ளி ஜரிகை பார்டர்கள் மற்றும் பாரம்பரிய வடிவங்களைக் கொண்ட புடவைகளின் விலை ₹2 லட்சத்தைத் தாண்டி விட்டது.
தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்தும், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் பட்டுப்புடவைகளை வாங்க காஞ்சிபுரத்துக்கு வருவது உண்டு.
ஆனால் இப்போது பட்டுப்புடவைகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் புடவை வாங்க வருபவர்கள் அதிக விலை கொண்ட பட்டுப்புடவைகளை வாங்குவதை தவிர்க்கிறார்கள்.
மேலும் விலை குறைந்த புடவைகளை வாங்குவதுடன், குறைவான எண்ணிக்கையிலேயே புடவைகளை வாங்கும் நிலைக்கும் தள்ளப்பட்டு உள்ளனர். இதனால் தற்போது திருமண சீசன் என்றபோதும் பட்டுப்புடவை விற்பனை குறைந்து விட்டது என்று விற்பனையாளர்கள் புலம்புகின்றனர்.
காஞ்சிபுரத்தில் மட்டும் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் நெசவு தொழிலில் ஈடுபட்டு வரும் நிலையில் பட்டுப்புடவை விற்பனை குறைந்துள்ளதால் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நெசவாளர்கள் பலருக்கு வேலை வாய்ப்பு பறிபோகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்வு பலரது வாழ்வாதாரத்தையே அழித்து விடும் என்பதற்கு பட்டுத் தொழில் ஒரு சாட்சியாக கண்முன் வந்து நிற்கிறது.
‘காஞ்சிபுரம் புடவையின் கலைத்திறன் அப்படியே உள்ளது, ஆனால் மூலப்பொருட்கள் மிகவும் விலை உயர்ந்துவிட்டன. ஆனாலும் காஞ்சிபுரம் பட்டு புடவை இன்னும் மக்களால் விரும்பப்படுகிறது, ஆனால் இப்போது அதை வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது’ என்று ஒரு நெசவாளர்கள் புலம்பியதை கேட்க முடிந்தது.
இனி வரும் காலங்களில் தங்கம், வெள்ளி விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்தால் அது காஞ்சிபுரம் பட்டுத் தொழிலுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்று நெசவாளர்களும், விற்பனையாளர்களும் கவலை அடைந்துள்ளனர். இதற்கு மத்திய, மாநில அரசுகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.