

நவீன வசதிகளுடன் கே.இ.ஓ.(KEO) என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதியை கொண்ட சொந்த பயன்பாட்டு கம்ப்யூட்டரை கர்நாடகா தயாரித்துள்ளது. இந்த கணினி சொந்த தொழில்நுட்பத்தில், கன்னடர்களால் வடிவமைக்கப்பட்டது. பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையத்தில் மூன்று நாட்கள் நடைபெற்ற டெக் (தொழில்நுட்ப) மாநாட்டில் இந்த கம்ப்யூட்டரை அறிமுகம் செய்தது.
தகவல் தொழில்நுட்ப மாநாட்டில் கர்நாடக அரங்கில் வைக்கப்பட்டு இருந்த இந்த கம்ப்யூட்டர் பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தது. இது விலை உயர்ந்த சாதனம் அல்ல. அனைவரும் வாங்கக்கூடிய வகையில் தான் இதன் விலை உள்ளது. அதாவது, இதன் விலை ரூ.18,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கம்ப்யூட்டர் மாணவர்களின் கற்றலுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று அரசு கூறியுள்ளது.
டிஜிட்டல் பிரிவினைக்கு இந்த கம்ப்யூட்டர் ஒரு செயல்முறை பதில் ஆகும்.
அனைவரும் இந்த கம்ப்யூட்டரை பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளதால் சிறு வணிகர்கள், என்ஜினீயர்கள், புத்தாக்கத்தை ஏற்படுத்துபவர்கள், மாணவர்கள், வீடுகளில் உள்ளோருக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இந்த கம்ப்யூட்டரில் 4ஜி, வைபை, எதர்நட், யு.எஸ்.பி.-ஏ, யு.எஸ்.பி.-சி, எச்.டி.எம்.ஐ., ஆடியோ உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. இதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த கம்ப்யூட்டர் 8 ஜி.பி. ரேம் வசதி கொண்டது. இதன் தகவல்கள் சேகரிப்பு திறன் 32 ஜி.பி. ஆக உள்ளது. இதை ஒரு டி.பி. வரை விஸ்தரிக்க முடியும். சிறிய வகை கம்ப்யூட்டரான இதன் எடை 300 கிராம் ஆகும்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கொண்டுள்ளதால், இணையதள வசதி இல்லாவிட்டாலும் இது செயல்படும். இணைய தொடர்பு வசதி சரியாக இல்லாத பகுதிகளிலும் இந்த கணினியை பயன்படுத்தும் அளவுக்கு அவற்றில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதிகள் செய்யப்பட்டுள்ளன., சுருக்கமாக, 'கியோ' கம்ப்யூட்டர் இணையதள வசதியைக் கொண்டுள்ளது, ஆனால் அதே சமயம் இணையம் இல்லாமலேயே செயல்படும் AI திறன்களையும் கொண்டிருப்பது அதன் தனிச்சிறப்பு.
இந்த கம்ப்யூட்டர் விரைவில் சந்தைக்கு வரவுள்ளது. இந்த மாநாட்டில் ஏற்கனவே 1,500 பேர் இந்த கம்ப்யூட்டர்களை வாங்க முன்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கர்நாடக மின்சாதன மேம்பாட்டு வாரிய (கியோனிக்ஸ்) தலைவர் சரத் பச்சேகவுடா கூறுகையில், "கர்நாடகம் சொந்தமாக கம்ப்யூட்டரை தயாரித்துள்ளது. இதை மாநாட்டில் அறிமுகப்படுத்தி பொதுமக்கள் பார்வைக்கு வைக்கிறோம். டிஜிட்டல் விஷயங்களை கற்றுக்கொள்ள இந்த கம்ப்யூட்டர் அனைத்து பள்ளி, கல்லூரிகள், வணிக நிறுவனங்கள், மக்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும்" என்றார்.