

உடல் உறுப்பு தானம் என்பது நோய்வாய்ப்பட்டவர்களுக்கு வாழ்வளிக்கும் ஒரு உன்னத செயலாகும். ஒருவர் இறந்த பின்னரோ அல்லது உயிருடன் இருக்கும்போதோ தனது உறுப்புகளை மற்றொருவருக்கு தானம் செய்வதாகும். உயிருடன் இருப்பவர்கள் ஒரு சிறுநீரகம் அல்லது கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்யலாம். இறந்த பிறகு, இதயம், சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல், கணையம், சிறுகுடல், கண்கள், தோல் போன்றவற்றை தானம் செய்யலாம். அந்த வகையில், ஒரு நன்கொடையாளர் 8-க்கும் மேற்பட்ட உயிர்களைக் காக்க முடியும்.
இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் கடந்த 2008-ம் ஆண்டு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி அவர்கள், மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்பு தானம் பெறும் திட்டத்தினை தொடங்கி வைத்தார். அப்போது உடல் உறுப்பு தானம் குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது.
எனவே, 2023-ல் பொதுமக்களிடையே மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்த உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களுக்கு, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு, மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தி வருகிறது. உறுப்பு தானம் செய்பவர்களின் தியாகத்தைப் போற்றி, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, உறுப்பு தானம் செய்வதை ஊக்குவிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். இந்தத் திட்டத்தின் காரணமாக, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு உறுப்பு தானம் செய்யும் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் பாராட்டியுள்ளது.
உடல் உறுப்பு தானம் திட்டம் தொடங்கி 2008-ம் ஆண்டு வரை 7 பேர் மட்டுமே தானம் செய்திருந்த நிலையில், கடந்த 2024-ல் 268 பேரும், 2025-ல் 267 பேரும் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர். இதில் 79 சதவீதம் ஆண்களும், 21 சதவீதம் பெண்களும் அடங்குவார்கள். கடந்த ஆண்டு 267 பேரிடம் இருந்து 1,476 உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தமிழ்நாட்டில் ஒருபுறம் உடல் உறுப்பு தானம் செய்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், உடல் உறுப்பு தானம் பெறுவதற்காக பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை வேகமாகவே அதிகரித்து வருகிறது. அதன்படி, தமிழ்நாட்டில் சிறுநீரகம் வேண்டி 7,682 பேரும், கல்லீரல் பெற 554 பேரும், இருதயம் வேண்டி 84 பேரும், நுரையீரலுக்காக 55 பேரும் என மொத்தம் 8,375 பேர் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த 2025-ம் ஆண்டில் உடல் உறுப்புகள் தானத்தில் செய்தவர்களில் மாநிலம் வாரியாக முதல் 5 இடங்களை பிடித்த மாநிலங்களில் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 267 பேரின் உடல் உறுப்புகளை தானமாக பெற்று இந்த பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.
205 பேரின் உடல் உறுப்புகள் தானமாக பெற்று தெலுங்கானா 2-வது இடத்தையும், 198 பேரின் உடல் உறுப்புகள் தானமாக பெற்று கர்நாடகம் 3-வது இடத்தையும், 153 பேர்உடல் உறுப்புகள் தானமாக பெற்று மகாராஷ்டிரா 4-வது இடத்தையும், குஜராத் 152 பேரின் உடல் உறுப்புகள் தானமாக பெற்று 5-வது இடத்தையும் பிடித்துள்ளது.