ஒருவர் நோயுற்று உடலுறுப்பு பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு மற்றொருவர் அந்த உடல் உறுப்பைத் தானமாகத் தருவதை உடல் உறுப்புகள் தானம் என்று சொல்கின்றனர்.
ஒருவர் இறந்த பின்னர், அவருடைய உடல் உறுப்புகளைக் கொடையாகத் தருவதன் வழியாக, இறந்த பின்னரும் அவருடைய உறுப்பின் வழியாக மற்றொருவர் வாழ்வதுடம், அவரும் வாழ்வதாகச் சொல்லப்படுவதுண்டு. உடலுறுப்புகளைக் கொடையாக வழங்குவது சமயக் கோட்பாடுகளை மீறிய செயல் என்று சொல்லப்பட்ட நிலை தற்போது மாறி வருகிறது.
ஒருவர் உயிருடன் இருந்தாலும், அவருடைய மூளையின் பகுதி பாதிப்படைந்து செயலிழக்கும் நிலையில் அவருடைய இருதயம், சிறுநீரகம் போன்ற முக்கியமான சில உடல் உறுப்புகளை அவருடைய வாரிசுதாரர்கள் விரும்பினால் கொடையாக வழங்க முடியும். இந்த உடல் உறுப்புகளைக் கொடையாகப் பெற்று சிலர் உயிர் வாழ முடியும் என்பதால் இந்த உடலுறுப்புகள் கொடை செய்வது மிகவும் உயர்வானது என்று சொல்லப்படுகிறது.
உயிருடன் இருக்கும் பொழுது உறுப்புகளைக் கொடையாக வழங்குவதற்கு 1954 ஆம் ஆண்டு முதல் சில நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.
1902 ஆம் ஆண்டில் முதன் முதலாக 'அலெக்ஸில் கர்ல் என்ற அறிஞர் இரத்தக் குழாய்களை வெற்றிகரமாக இணைத்து மாற்று அறுவை சிகிச்சை முறைக்கு வழி வகுத்தார் என்று சொல்லப்படுகிறது.
1905 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், டாக்டர் எட்வர்ட் ஸிம் என்பவர் முதன் முதலாக கார்னியா கண் அறுவை சிகிச்சை செய்தார்.
1918 ஆம் ஆண்டு, முதல் உலகப் போரின் போது தான் இரத்தம் கொடையாகப் பெற்றுப் பயன்படுத்தப்பட்டது.
1954 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் 'பாஸ்டன்' நகரில் டாக்டர். ஜான் முர்ரே என்பவர் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தார்.
1954 ஆம் ஆண்டு பீட்டர் பென்ட் மருத்துவமனையில், ரிச்சர்ட், ரோனால்ட் என்ற இரட்டையரில், ரொனால்டின் சிறுநீரகத்தை ரிச்சர்டிற்குப் பொருத்தினார்கள்.
1960 ஆம் ஆண்டு ஐரோப்பாவின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. சர்.மைக்கேல் உட்ரோப் செய்தார்.
1960 ஆம் ஆண்டு 'கொலராடோ'விலுள்ள டென்வர் என்ற இடத்தில் முதல் முதலாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
1965 ஆம் ஆண்டு தான் முதன் முதலாக இறந்தவரின் உறுப்புக்களை மாற்று அறுவை சிகிச்சைக்காகப் பயன்படுத்தினர்.
1967 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் நாள், தென் ஆப்பிரிக்காவின் 'கேப்டவுன்' நகரில் டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் முதன் முதலாக 'டென்னிஸ் டார்வெல்' என்பவரின் இதயத்தை 'லூயிஸ் வாஷ்கேன்ஸ்க்கி' என்பவருக்கு பொருத்தி, இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தார்.
1968 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.
1981 ஆம் ஆண்டு முதன் முறையாக ஒரே நேரத்தில் இதய, நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சை அமெரிக்காவின் ஸ்டான்போர்டில் நடைபெற்றது.
1983 ஆம் ஆண்டு 'சர். மாக்டியா கூப்' என்பவர் ஐரோப்பாவிலுள்ள மருத்துவமனையில், நுரையீரலையும், இதயத்தையும் ஒரே சமயத்தில் மாற்றி அறுவை சிகிச்சை செய்தார்.
1986 ஆம் ஆண்டு நுரையீரல் மட்டும் எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
1994 ஆம் ஆண்டு முதன் முதலாக, உயிருடன் உள்ள ஒருவர் தன் கல்லீரலைத் கொடையாகத் தந்தார்.
2001 ஆம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டின் டாக்டர் ஸ்ட்ரிக் ஸ்ட்ரீன், இதயத் துடிப்பு நின்ற பின்னர் நுரையீரலை எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்தார்.
2005 ஆம் ஆண்டு முதன் முதலாக முகத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் உறுப்புக்களை மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைதான் முதன் முதலாக நடைபெற்ற மனித உறுப்புகளின் மாற்று அறுவை சிகிச்சையாகும்.
உடலிலுள்ள உறுப்புக்களை
சிறு நீரகம் - 72 மணி நேரம் வரை
கல்லீரல் - 18 மணி நேரம் வரை
இதயம் - 5 மணி நேரம் வரை
இதயம் / நுரையீரல் - 5 மணி நேரம் வரை
கணையம் - 20 மணி நேரம் வரை
கண் விழித்திரை (கார்னியா) - 10 நாட்கள் வரை
எலும்பு மஜ்ஜை - கால அளவு மாறும்
தோல் - 5 வருடம், அதற்கு மேலும்
எலும்பு - 5 வருடம், அதற்கு மேலும்
இதயத்தின் வால்வுகள் - 5 வருடம் அதற்கு மேலும்
எனும் கால அளவுகளில் பொதுவாக பாதுகாத்து வைத்துப் பயன்படுத்த முடியும்.
உயிருடன் இருக்கும் போது நம்மால் கொடையாகத் தர இயலும் உறுப்புகளை கொடையாக அளித்துப் பலருக்கு உயிர் கொடுக்கலாம். இறந்த பின்பு, உடலை எரித்துச் சாம்பலாகவோ அல்லது மண்ணுக்குள் புதைத்து மக்கிப் போகச் செய்வதற்குப் பதிலாக, உரிய நடைமுறைகளைப் பின்பற்றி, இறப்பிற்குப் பின்பு, நம் உடலிலிருந்து கொடையாகக் கொடுக்கக் கூடிய உறுப்புகளைக் கொடையாக வழங்கிட உறுதி மொழிகளை அளித்து, அதன் வழியாகச் சிலருக்குக் கூடுதலாகச் சில காலம் உயிர் வாழ உதவலாம் என்று உடல் உறுப்புக் கொடை குறித்துக் கருத்து தெரிவிக்கப்படுகிறது.
உடல் உறுப்புகள் கொடையாக வழங்கும் பொருட்டு மக்களிடம் சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழ் திரைப்பட நடிகர் கமலஹாசன் தன்னுடைய உடல் உறுப்புகளை, தான் இறந்த பிறகு தானம் செய்வதற்கு உறுதிமொழி அளித்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.