

நாடு முழுவதும் 80 ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம் களை கட்டி வருகிறது. இன்று செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியேற்றி சுதந்திர தின உரையாற்றினார். இன்று சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்த, திமுகவின் மாநில மகளிர் அணி தலைவியும் , தூத்துக்குடி தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான கனிமொழி தனது தந்தை மு.கருணாநிதி பற்றியும் குறிப்பிட்டுள்ளது , கவனம் பெற்று வருகிறது.
கனிமொழி தனது X தள பதிவில்,
"எண்ணற்ற தியாகங்களாலும் போராட்டங்களாலும் ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து இந்நாளில் விடுதலை பெற்றது, இந்திய நாடு.
அவ்வாறு போராடிப் பெற்ற சுதந்திரம் அனைத்து மக்களுக்குமானது என்பதை உணர்த்தும் வகையிலும், இந்நாடு ஏற்றுள்ள கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்தும் வகையிலும், சுதந்திர தினத்தன்று மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடியேற்றும் உரிமையைப் போராடிப் பெற்றுத் தந்தவர் தலைவர் கலைஞர்.
தாய்நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வீரர்களின் தியாகங்களைப் போற்றுவோம். அந்த விடுதலையை முழுமையாக்கும் கூட்டாட்சித் தத்துவத்தின் விழுமியங்களை உயர்த்திப் பிடிப்போம்!" என்று கூறியிருந்தார்.
கனிமொழி தனது பதிவில் தனது தந்தை கருணாநிதி தான், சுதந்திர தினத்தின் பொழுது கொடி ஏற்றும் உரிமையை மாநில முதல்வர்களுக்கு பெற்று தந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.
கனிமொழி பதிவும் உண்மையும்:
பிரிட்டிஷ் கொடுங்கோல் ஆட்சியில் இருந்து இந்தியா ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. அன்று பிரிட்டிஷ் நாட்டின் யூனியன் ஜாக் கொடி இறக்கப்பட்டு இந்தியாவின் தேசியக்கொடி நாடு முழுக்க ஏற்றப்பட்டது. முழு தேசத்திற்கும் விடுதலை கிடைத்த பின், மாநிலங்களுக்கு சமமான உரிமைகள் வழங்குவதற்கு, மாநிலத்தின் அரசியல் தலைவரான முதலமைச்சருக்கு கொடியேற்றும் அதிகாரத்தினை சட்டபூர்வமாக தரப்படவில்லை.
இந்தியாவின் சுதந்திர தினத்தின் பொழுது நாட்டின் தலைநகரில், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்களின் தேசிய பிரதிநிதியான பிரதமர் கொடியேற்றி வைக்கிறார். அதை போல் மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்களின் அரசியல் பிரதிநிதியான முதலமைச்சருக்கும் அது போன்ற அதிகாரங்களை கொடுக்கவில்லை. அந்த காலகட்டத்தில் சுதந்திர தினத்தன்று, ஒவ்வொரு மாநிலத்திலும் ஆளுநர்களே கொடி ஏற்றுவது அதிகாரப்பூர்வமான நடைமுறையாக இருந்து வந்துள்ளது.
1970-களின் முற்பகுதி வரை இந்த நடைமுறை இந்தியா முழுவதும் நீடித்து வந்தது. இந்தியாவின் அப்போதைய அரசியலமைப்பு சட்டமும் இந்த நடைமுறையை பின்பற்றி வந்தது. இதனால் மாநில கவர்னர், மாநிலத்தின் தலைமைச் செயலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைப்பார். இதன் மூலம் மாநில அரசின் நிர்வாகியாக மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படாத கவர்னரே இருந்துள்ளார்.
இதனால், மாநிலத்தின் அதிகாரம் ஆளுநருக்கா? அல்லது மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் முதல்வருக்கா? என்ற விவாதம் தொடர்ச்சியாக நடந்து வந்துள்ளது. சுதந்திர தின நிகழ்ச்சிகளில், மாநில முதல்வர்கள் ஒரு விருந்தினர் போலவும் பார்வையாளர்கள் போலவும் கருதப்பட்டனர்.
1970 - களின் முற்பகுதியில் தமிழக முதல்வராக பதவி வகித்த கருணாநிதி , மாநில முதல்வர்வர்களுக்கு அதிகாரம் வேண்டும், என்று தீவிரமாக செயல்பட்டு வந்தார். அப்போதைய மத்திய அரசாக இருந்த காங்கிரஸ் அரசுக்கு தொடர்ச்சியாக கடிதங்கள் மூலம் , மாநில முதல்வர்களுக்கு தேசியக் கொடி ஏற்றும் உரிமை வேண்டுமென்று வலியுறுத்தி வந்தார். இறுதியாக 1974 ஆம் ஆண்டில் சுதந்திர தினத்தன்று மாநில முதல்வர்கள் தேசிய கொடியேற்றும் அதிகாரத்தினை மத்திய அரசு அங்கீகரித்தது. அதைத் தொடர்ந்து சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் மு.கருணாநிதி தேசிய கொடி ஏற்றி வைத்தார்.