அஸர்பைஜான் விமான நிலயத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று கஜகஸ்தானின் அக்டாவ் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
விமான விபத்து மற்றும் படகு விபத்து போன்றவை சாலை விபத்துகளைவிட மிகவும் கொடுமையானவை. ஏனெனில், சாலை விபத்துக்களின்போது நாம் விரைவாக அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றிவிடலாம். ஆனால், விமான விபத்தும் படகு விபத்தும் அப்படியல்ல. அவர்களை மீட்பதென்பதே மிகவும் சிரமமாகிவிடும். இதன்பின்னர் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உயிரைக் காப்பாற்றுவது மிகவும் சவாலான விஷயமாகிவிடும். இதனால் இந்த இரண்டிற்கும் ஏராளமான பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படும்.
அப்படியிருந்தும்கூட அவ்வப்போது விபத்துக்கள் நடக்கத்தான் செய்கின்றன. குறிப்பாக சமீபக்காலமாக அதிகமாக படகு விபத்துக்கள் ஏற்படுகின்றன. பனிமூட்டம் காரணமாக விமான விபத்துக்களும் அதிகம் ஏற்படுகின்றன.
அந்தவகையில் தற்போது அஜர்பைஜான் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான எம்ப்ரேயர் 190 ரக பயணியர் விமானம், அஸர்பைஜானின் தலைநகர் பாக்குவில் இருந்து கிளம்பி ரஷ்யாவின் செசன்யா பகுதியில் உள்ள க்ரோஸ்னியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.
ஆனால், க்ரோஸ்னியில் பனிமூட்டம் அதிகம் இருந்ததால், விமானம் திருப்பி அனுப்பப்பட்டது. இதனையடுத்து கஜகஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த அந்த விமானத்தை அக்டாவ் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க அந்த விமானி அனுமதி கேட்டுள்ளார். சில நிமிடங்கள் அங்கேயே வட்டமடித்துக் கொண்டிருந்த விமானம் திடீரென அக்டாவ் விமான நிலையத்திற்கு சில தூரத்திற்கு முன்பு விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 20க்கும் மேற்பட்டோர் உயிர் பிழைத்ததாகவும் செய்திகள் வந்துள்ளன.
விபத்துக்குள்ளான விமானத்திற்குள் அஸர்பைஜான், ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இருந்ததாகத் தகவல் தெரிவித்துள்ளது அஸர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனம்.
மேலும் இந்த விபத்து குறித்தான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்ட விசாரணையில் விமானம் மீது பறவை மோதிய காரணத்தால், கஜகஸ்தானின் அக்டாவ் விமானநிலையத்திற்கு விமானி விமானத்தை செலுத்தியாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்தான முழு விசாரணையும் நடந்து வரும் நிலையில், இந்த விபத்துக் குறித்தான முழுக் காரணம் விரைவில் வெளியாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.