சபரிமலை தரிசனம் இனி ரொம்ப ஈஸி! தரிசன முன்பதிவுக்கு 6 மொழிகளில் புதிய செயலி அறிமுகம்..!!

சபரிமலை ஐயப்பன் கோவில் தரிசனத்திற்காக 6 மொழிகளில் புதிய டிஜிட்டல் தளம் மற்றும் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சபரிமலை தரிசனம்
சபரிமலை தரிசனம்Image credit: Gemini AI
கவிதா பக்கிள்

கவிதா பக்கிள், பிரபல நாளிதழில் 14 ஆண்டுகள் Content Writer-ஆகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது கல்கி ஆன்லைனில் செய்திகள், விளையாட்டு, சினிமா, கலை, ஆன்மிகம், யோகா ஆகிய பிரிவுகளில் வாசகர்களுக்குப் பயனுள்ள கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

சபரிமலை ஐயப்பன் கோவில் தரிசனத்துக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக 6 மொழிகளில் புதிய டிஜிட்டல் தளம் மற்றும் செயலி (சபரிமலை தரிசனம்) திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு மூலமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பக்தர்கள் ரெயில், பஸ் போக்குவரத்து தகவல்களை எளிதாக பெற முடியும்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு வருகிற 16-த்தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 17-ந்தேதி முதல் மண்டல பூஜை வழிபாடுகள் நடைபெற உள்ளது. மண்டல பூஜை டிசம்பர் 27-ம் தேதியும், மகர விளக்கு மற்றும் ஜோதி தரிசனம் 2027-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதியும் நடைபெற உள்ளன.

இதற்கிடையே சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்ய விர்ச்சுவல் கியூ (Virtual Queue) முன்பதிவு கட்டாயம் என்று திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அறிவுறுத்தியுள்ளது. பக்தர்கள் அதிகாரப்பூர்வ திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு இணையதளம் அல்லது செயலி வழியாக முன்பதிவு செய்யலாம். விர்ச்சுவல் கியூ முன்பதிவு முற்றிலும் இலவசம். சபரிமலை மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை தரிசனத்திற்கு வரும் அனைத்து பக்தர்களும் (குறிப்பாக வெளிமாநில பக்தர்கள்) தாங்கள் புறப்படும் முன்பே ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பக்தர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், செல்லுபடியாகும் கைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்திப் பதிவுசெய்து, தேவையான அடையாள விவரங்கள்/புகைப்படங்களைப் பதிவேற்றி, தங்களுக்கு விருப்பமான தேதி, நேரம் மற்றும் வழித்தடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பின்படி, நேரடி ஸ்பாட் புக்கிங் (Spot booking) குறைக்கப்பட்டுள்ளது, எனவே பக்தர்கள் முன்கூட்டியே முன்பதிவு செய்து வருவது அவசியமாகும்.

Sabarimala pilgrimage
Sabarimala pilgrimage

நவம்பர் 17-ம்தேதி கார்த்திகை மாதம் பிறக்கிறது. ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் அனுஷ்டித்து சபரிமலை கோவிலுக்கு செல்வது வழக்கம். கேரளா மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் மாலை அணிந்து சபரிமலைக்கு செல்வது வழக்கம்.

இந்நிலையில் நடப்பு சீசனை முன்னிட்டு சபரிமலை தொடர்பான அனைத்து விவரங்களையும் பக்தர்கள் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் sabariportaldcpta.in என்ற பெயரில் புதிய இணையதள செயலி (போர்ட்டல்) அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக புதிய இணையத செயலி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் என 6 மொழிகளில் செல்போன், கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் விதத்தில் QR குறியீடு வசதியும் இணைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு மற்றும் பூஜை தேதிகள்: முழுமையான அட்டவணை!
சபரிமலை தரிசனம்

இதுதவிர ‘வாட்ஸ்அப் சாட்பாட் ’ (WhatsApp Chatbot) போன்றவையும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

இதனை பயன்படுத்தி ஐயப்ப பக்தர்கள் சபரிமலை தொடர்பான அனைத்து விவரங்களையும் எளிதில் தெரிந்துகொள்ளலாம்.

சபரி மேப் (Sabar Map) மூலம் பம்பை, நிலக்கல் மற்றும் வாகன நிறுத்துமிடங்களை பக்தர்கள் எளிதில் கண்டறிய சிறப்பு வரைபட வசதி இணைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த செயலி மூலம் பக்தர்கள் தங்களது பிரச்சனைகளை புகார்களாக தெரிவிக்கலாம். குறிப்பாக காணாமல் போனவர்கள் விவரங்கள், தவறவிட்ட பொருட்கள் குறித்த விவரங்களை இந்த செயலியில் புகாராக பதிவு செய்யும் பட்சத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்த செயலியில் ஆன்லைன் முன்பதிவு செய்யும் வசதியும் உள்ளது. அத்துடன் வாகன நிறுத்தம், ரெயில், பஸ் போக்குவரத்து குறித்த தகவல்களும் கிடைக்கும்.

பக்தர்களின் பயன்பாட்டுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த டிஜிட்டல் சேவைகள் அனைத்தும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
சபரிமலை ஆன்மீக அனுபவ கட்டுரை: அழைத்ததும் அவனே… அருளியதும் அவனே!
சபரிமலை தரிசனம்

சபரிமலை தரிசனத்துக்கு முன்பதிவு செய்ய ஏற்கனவே இணையதளம் உள்ள நிலையில் தற்போது அனைத்து விவரங்களுடன் 6 மொழிகளில் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.