குரங்குகள் வாழை இலையில் சாப்பிட்டு பார்த்திருக்கிறீர்களா? "குரங்குகளுக்கு ஓணசத்யா"!

கோயிலில் வாழை இலையில் ஓணசத்யா சாப்பிடும் குரங்குகள்!: கேரள சாஸ்தாம்கோட்டாவில் நடக்கும் வினோத 'வானர சத்யா'!
monkey
monkeysource:Toptamilnews
Updated on

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சாஸ்தாம்கோட்டாவில் உள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு குரங்குகளுக்கு வாழை இலையில் 'வானர சத்யா' எனப்படும் சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது ஆச்சரியம் தரும் ஆன்மீக செய்தியாக கவர்கிறது.

கேரளாவில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஓணம் மிக பிரசித்தி பெற்றது. கேரளாவைத்தாண்டி தமிழ்நாட்டிலும் இளம் பெண்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் படைக்கப்படும் அவியல் பாயசம் உள்ளிட்ட அறுசுவை உணவுகள் நிறைந்த ஓணசத்யா விருந்து அனைவருக்கும் பிடித்தமானது.

"கானம் விற்றாவது ஓணம் உண்" என்ற பழமொழிக்கு ஏற்ப, ஓணம் பண்டிகையில் உணவுக்கும் விருந்தோம்பலுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.ஓணம் சத்யாவில் பலவிதமான சைவ உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. சாதம், பருப்பு, நெய், சாம்பார், ரசம், மோர், அவியல், தோரன், காலன், ஓலன், எரிசேரி, கூட்டு, பச்சடி, கிச்சடி உள்ளிட்ட பல உணவு வகைகள் இதில் இடம்பெறும்.இனிப்பு வகைகளில் அடை பிரதமன், பால் பாயசம் உள்ளிட்ட பாயசங்கள் முக்கிய இடம் பெறுகின்றன. சர்க்கரைப் புரட்டி, பப்படம், ஊறுகாய் உள்ளிட்டவையும் சத்யா விருந்தின் சுவையை மேலும் அதிகரிக்கின்றன. ஓணம் சத்யாவின் மற்றொரு சிறப்பு, உணவு வாழை இலையில் பரிமாறப்படுவது.

கேரளத்தில் ஓணம் பண்டிகையையொட்டி 'வானர சத்யா' என்ற பெயரில் குரங்குகளுக்கு ஓணம் விருந்து வழங்கப்பட்டது. பாரம்பரியம் மாறாமல் தலைவாழை இலையில் பரிமாறப்படும் ஓணசத்யா விருந்தை குரங்குகளும் சேட்டை செய்யாமல் அமைதியாக வரிசையில் நின்று சாப்பிட்டு செல்லும் வினோதம் கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள சாஸ்தம்கோட்டாவில் அமைந்துள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவிலில் வருடந்தோறும் நடைபெறுகிறது. இந்த விருந்தின் பெயர் வானர சத்யா ஆகும். அதாவது குரங்குகளுக்கான விருந்து என்பது பொருள்.

இங்கு உள்ள ஸ்ரீ தரும சாஸ்தா கோயில் ஒரு புண்ணியத் தலமாகும்.பரசுராமரால் நிறுவப்பட்டது என்று கூறப்படும் 12 முக்கிய ஐயப்பன் கோயில்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது. மிகப் பழைமையான இக் கோவிலினுள் மூலவர் ஸ்ரீ தர்ம சாஸ்தா, தமது துணைவியார் பிரபா மற்றும் மகன் சத்யகா ஆகியோருடன் வீற்றிருப்பதும் தனி சிறப்பு.

இக்கோயிலின் மூன்று புறங்களும் கேரளாவின் மிகப்பெரிய ஏரியான சாஸ்தாம்கோட்டை ஏரியால் சூழப்பட்டுள்ளது என்பதுடன் ஏராளமான வானரங்கள் கூட்டம் கூட்டமாக இக்கோயிலைச் சுற்றி குடியிருப்பது ஆச்சரியம் தரும் விஷயமாகிறது.

குரங்குகளின் இருப்பு, ஸ்ரீ ராமர் காலத்திலிருந்தே இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இராவணனைக் கொன்று அயோத்திக்குத் திரும்பியபோது, ​​சாஸ்தம்கோட்டாவில் வீற்றிருக்கும் ஐயப்பனுக்குப் பணிவிடை செய்ய ஒரு குரங்குக் கூட்டம் நியமிக்கப்பட்டதாக ஒரு ஐதீகம் உள்ளது.

குறிப்பாக இக்கோவில் ராமாயணம் நிகழ்ந்ததாக கூறப்படும் காலகட்டம் வரையில் பழைமை வாய்ந்தது என்றும், ஸ்ரீராமர், சீதை மற்றும் இலக்குவன் ஆகியோர் போர் முடிந்ததும் வானரப்படையுடன் அயோத்திக்குத் திரும்பும் வழியில் இங்கே உள்ள ஐயப்பனை வணங்கியதாக பழமையான நம்பிக்கை நிலவுகிறது.

மேலும் இங்குள்ள ஏரிக்கரையில், ஸ்ரீராமர் தங்கள் மூதாதையருக்கு பித்ரு தர்ப்பணம் செய்ததாகவும் ஸ்ரீராமரின் வானரப்படைத் தலைவர் நீலன் என்ற குரங்கை ஐயப்ப சேவைக்காக சாஸ்தாம்கோட்டையில் விட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது. அந்த நீலனின் பரம்பரையில் உள்ள குரங்குகள்தான் இக்கோயிலில் இன்றும் காணப்படுகின்றன என்பதும் இங்குள்ளவர்களின் நம்பிக்கையாக உள்ளது.

அத்துடன் குரங்குகள் வசிக்கும் காட்டு நிலத்தின் மத்தியில் சாஸ்தாம்கோட்டை கோயில் இருப்பதால், இந்த வழிபாட்டுத் தலத்தையும் குரங்குகள் தங்கள் வீடாக மாற்றிக் கொண்டு விட்டன என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. இங்குள்ள வானரங்கள் அமைதியாக அங்கு வரும் பக்தர்கள் தரும் கடலை, பழங்கள் போன்றவற்றை வாங்கிச் சாப்பிட்டு வாழ்கின்றன.

இங்குள்ள 'வானர போஜன சாலா' என்ற மண்டபத்தில் வாழை இலைகள் விரிக்கப்பட்டு, குரங்குகள் வரிசையாக வந்து அமர்ந்து உணவருந்திச் செல்கின்றன. ஒரு கூட்டம் சாப்பிட்டு முடித்ததும் அடுத்தடுத்தக் கூட்டங்கள் வந்து உணவை உண்பது கண்கொள்ளாக் காட்சியாக மக்களைக் கவர்கிறது. பண்டிகை நாட்களான உத்திராடம் மற்றும் திருவோணம் நாட்களில் இந்த விசேஷ சடங்கு நடக்கிறது.

Monkey...
Monkey...

சாஸ்தம்கோட்டாவைச் சுற்றியுள்ள பெரியவர்கள் வானர சத்யா எனப்படும் குரங்குகளுக்கு வாழையிலையில் விருந்து அளிக்கும் இந்தச் சடங்கு குறைந்தது 50 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை உறுதிப்படுத்துகின்றனர்.

அங்குள்ள குரங்குகளுக்கு அவியல் மற்றும் பாயசம் மிகவும் பிடித்தமானவை என்றும் அப்பளம், சர்க்கரைவரட்டி மற்றும் வாழை சிப்ஸ் ஆகியவை பரிமாறப்படும் மற்ற பிரபலமான உணவுகளாகும். குரங்குகளுக்கு ஓணசத்யா பரிமாறப்படுவதைக் காண ஆர்வமுள்ள மக்கள் கூட்டத்தை இக்கோவிலில் காணலாம்.

இங்கு உத்திராடம் முதல் சத்யா வரை குரங்குகளுக்குப் பலவிதமான உணவுகள் படைக்கப்படுகின்றன. குரங்குகளுக்கு வழக்கமான உணவிற்குப் பதிலாக ஓணசத்யா வழங்கப்படுகிறது. வானர சத்யாவில் படைக்கப்படும் பொருட்களில் தக்காளி, பீட்ரூட், கேரட், வெள்ளரிக்காய், கோவைக்காய், வாழைப்பழம், அன்னாசிப்பழம் மற்றும் தேங்காய்த் துண்டுகளுடன் சாதம் மற்றும் அப்பளமும் அடங்கும். மேஜையின் மீது விரிக்கப்பட்ட இளவாழையிலையில் இந்த சத்யா பரிமாறப்படுகிறது. வட மலபாரின் இந்தப் பகுதியில் பல ஆண்டுகளாக வானர சத்யா மிகுந்த உற்சாகத்துடனும், மக்கள் பங்கேற்புடனும் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

வானர சத்யா அனைத்து உயிரினங்களுக்கும் இடையிலான சமத்துவத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக மட்டுமின்றி விருந்து உண்ணும் போது கடைபிடிக்க வேண்டிய தனிமனித ஒழுக்கத்தையும் மனிதர்களுக்கு கற்றுத் தருகிறது எனலாம்.

logo
Kalki Online
kalkionline.com