
விவசாயிகளின் நலனுக்காக கடந்த 2004 ஜனவரி 21 ஆம் தேதி நாடு முழுவதும் 17 கிசான் கால் சென்டர்கள் (Kisan Call Centers) தொடங்கப்பட்டன. இதற்காக 1800-180-1551 என்ற இலவச எண்ணையும் மத்திய அரசு அறிவித்தது. இந்த கால் சென்டர்களை விவசாயிகள் தொடர்பு கொண்டு தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம்.
விவசாயிகள் அந்தந்த மாநில மொழிகளில் தகவல்களைப் பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் கிசான் கால் சென்டர் எங்குள்ளது என தமிழ்நாடு எம்.பி. மலையரசன் நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.
கிசான் கால் சென்டர் குறித்த கேள்விக்கு மத்திய வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் பதிலளித்தார். அதில், “நாடு முழுவதும் 17 கிசான் கால் சென்டர்கள் இயங்குகின்றன. இவை தினந்தோறும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும். விவசாய தொழில்நுட்பங்கள், அறுவடை, சாகுபடி, பூச்சிக்கொல்லி, மண்வளம் மேம்படுத்துதல், தண்ணீர் மேலாண்மை மற்றும் சந்தை நிலவரங்கள் உள்ளிட்ட பல தகவல்களை விவசாயிகளுக்கு அளித்து வருகின்றன கிசான் கால் சென்டர்கள். இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள எண்ணற்ற விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு விவசாயிகளின் சந்தேகங்களைத் தீர்க்கவும், தகவல்களை வழங்கவும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் (TNAU) ஒரேயொரு கிசான் கால் சென்டர் இயங்குகிறது. நாடு முழுவதும் உள்ள அனைத்து கிசான் கால் சென்டருக்கான 11 இலக்க இலவச எண் 1800-180-1551. தமிழ்நாடு மட்டுமல்லாது நாட்டின் எந்த மூலையில் இருந்தும் கிசான் கால் சென்டரை எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் தொலைத்தொடர்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் பயிர்களின் வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து ஆலோசனை பெறவும் கிசன் கால் சென்டர் உதவிகரமாக இருக்கிறது. இருப்பினும் இன்னமும் ஒருசில விவசாயிகளுக்கு இப்படியொரு கால் சென்டர் இருக்கிறது என்பதே தெரியாது. ஆகையால் தான் சமூக வலைதளங்கள், ரேடியோ மற்றும் விளம்பரங்கள் மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது மத்திய அரசு” என அமைச்சர் தெரிவித்தார்.
வேளாண் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் தான் கிசான் கால் சென்டர்களில் மேற்பார்வையாளராக பணியாற்றுகின்றனர். விவசாயத் தகவல்கள், சந்தை விலை மற்றும் அரசுத் திட்டங்கள் என அனைத்தையும் சமீபத்திய தகவல்களுடன் விவசாயிகளுக்கு இவர்கள் வழங்குகின்றனர்.
கிசான் கால் சென்டர்கள் ஒப்பந்த அடிப்படையிலான சேவை வழங்குநரின் மூலம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செய்லபடுகிறது. கால் சென்டருக்கோ அல்லது தனிப்பட்ட மாநிலத்திற்கோ மத்திய அரசு தரப்பில் இருந்து நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.