
இன்றைய காலகட்டத்தில் சாதனைகள் செய்ய வயது ஒரு தடையில்லை என்பதை சிலர் அடிக்கடி நிரூபித்து வருகின்றனர். அவ்வகையில் தற்போது 82 வயதான பாட்டி ஒருவர் பளு தூக்கும் போட்டியில் இளைஞர்களளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் செயல்பட்டிருப்பது, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பொதுவாக பளு தூக்கும் போட்டிகளில் பெண்களை விடவும் ஆண்கள் தான் அதிகளவில் பங்கேற்பார்கள். அப்படி இருக்கையில் 50கிலோ எடையை அசாத்தியமாக தூக்கி, இளையோர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார் பொள்ளாச்சியைச் சேர்ந்த V.கிட்டம்மாள். இவரது இந்த செயலைப் பார்த்து தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவும் தனது பிரமிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
‘தென்னிந்தியாவின் வலிமையான பெண்’ என்ற பெயரில் பளு தூக்கும் போட்டிகள் சமீபத்தில் கோவை மாவட்டத்தின் குனியமுத்தூரில் நடைபெற்றது. இதில் 30 வயதுக்கும் குறைவான 17 பெண்கள் 50கிலோ எடைப் பிரிவில் பங்கேற்றனர். இவர்களுடன் 82 வயதான கிட்டம்மாள் பாட்டியும் கலந்து கொண்டார். களத்திற்கு கிட்டம்மாள் வந்ததும் பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. இருப்பினும் 50 கிலோ எடையை அசாத்தியமாக தூக்கி 5வது இடத்தைப் பிடித்து அசத்தினார் கிட்டம்மாள்.
82 வயதில் ஒரு பெண் பளு தூக்கும் போட்டியில் கலந்து கொண்டு சாதிப்பது சாதாரண ஒன்றல்ல. கிட்டம்மாளுக்கு அவரது பேரன்களான ரித்திக் மற்றும் ரோஹித் ஆகியோர் உறுதுணையாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிட்டம்மாள் சிறு வயதிலிருந்தே கேழ்வரகு கஞ்சி, கூழ், வேகவைத்த காய்கறிகள் மற்றும் முட்டை என சத்தான உணவுகளையே சாப்பிட்டு வளர்ந்தவர். இவர் அன்றாடம் செய்யும் வேலைகளின் மூலமாகத் தான் பளு தூக்குவதில் சிரமமின்றி செயல்பட்டுள்ளார். இவர் தினந்தோறும் 25கிலோ அரசி மூட்டைகளை சுமந்து செல்வது வழக்கம். அதோடு பானைகளில் தண்ணீரை எடுத்துச் செல்வதும் வழக்கமாக இவர் செய்யும் வேலைகள். நடைமுறை வாழ்க்கையில் அதிக எடையைத் தூக்கிப் பழகியதால் தான், தற்போது பளு தூக்கும் போட்டியில் வலிமையுடன் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.
பாட்டியின் செயல்களைப் பார்த்த பேரன்கள் இருவரும் இவருக்கு ஜிம் பயிற்சிகளை வழங்கி மெருகேற்றினர். அதோடு பளு தூக்கும் போட்டியில் கலந்து கொள்வதற்காக கடந்த 1 மாத காலமாக பயிற்சி எடுத்து வந்துள்ளார் கிட்டம்மாள். அடுத்ததாக தேசிய அளவிலான பளு தூக்குதல் போட்டியில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளார் கிட்டம்மாள் பாட்டி.
தள்ளாடும் வயதில் பளு தூக்கும் போட்டியில் கலந்து கொண்டு 5வது இடம் பிடித்த கிட்டம்மாள் பாட்டியின் வெற்றியைக் கண்டு ஆனந்த் மஹிந்திரா பிரம்மிப்படைந்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் கூறுகையில், “82 வயது பெண் எடையை மட்டுமல்ல நம் நம்பிக்கையையும் உயர்த்தி விட்டார். பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்று, வயது வெறும் எண் மட்டும் தான் என நிரூபித்து விட்டார் கிட்டம்மாள். காலம் கடந்தாலும் கனவு காண முடியும்; இலக்குகளைத் தொடர முடியும் என்பதற்கு கிட்டம்மாள் ஓர் உதாரணம். வயதைக் காட்டிலும் மன உறுதி தான் நம்மை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும்” என ஆனந்த் மஹிந்திரா பாராட்டிள்ளார்.