

கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தை ஒட்டி செல்லும் சென்னை கடற்கரையில், செங்கல்பட்டு இரயில் வழித்தடத்தில் பயணிகள் நலனுக்காக புதியதாக ஒரு ரயில் நிலையத்தை அமைக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் ரயில்வே துறைக்கு கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டது. இக்கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டதை அடுத்து, வண்டலூர், ஊரப்பாக்கம் இந்த இரண்டு ரயில் நிலையங்களுக்கு இடையே 12 பெட்டிகளைக் கொண்ட மின்சார ரயில் நிற்கும் வகையில் மூன்று நடைமேடைகளுடன் கூடிய ரயில் நிலையம் ஒன்று கிளாம்பாக்கத்தில் கடந்த ஒரு வருடமாக அமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை கிளாம்பாக்கம் ரயில் நிலையத்துடன் இணைக்கும் பணி தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சென்னை நகரிலிருந்து செங்கல்பட்டை நோக்கி செல்லும் வாகனங்களை அந்த சாலையில் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நெடுஞ்சாலையில் இந்த இரயில் நிலையத்தை பேருந்து நிலையத்துடன் இணைக்கும் பணி நிறைவடையும் வரை, செங்கல்பட்டை நோக்கி செல்லும் வாகனங்களை மாற்றுப்பாதையில் இயக்குமாறு வாகன ஓட்டிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதன் காரணமாக செங்கல்பட்டுக்கு செல்லும் சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்த பணிகளால் செங்கல்பட்டுக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து தற்பொழுது தடை செய்யப்பட்டு, மாற்று வழித்தடத்தில் போக்குவரத்துக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.
மேலும் பொது மக்கள், கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து கோயம்பேடு, தாம்பரம் கிண்டி போன்ற சென்னை நகரப் பகுதிகளுக்கு சிரமம் ஏதுமின்றி செல்வதற்கு வசதியாக மாநகரப் பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
இப்பணிகள் விரைவில் நிறைவடையும் என்றும் வர இருக்கும் பொங்கல் பண்டிகையின் போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பொதுமக்கள் கிளாம்பாக்கம் இரயில் நிலையத்தை எளிதில் சென்றடைந்து பயனடையும் வகையில் திறக்கப்படும் எனவும் அறியப்படுகிறது. இதன் காரணமாக கிளாம்பாக்கம் பகுதி மக்களும், தமிழ்நாட்டின் தென்பகுதியில் உள்ள நகரங்களுக்கு அடிக்கடி பயணம் செய்யும் பொதுமக்களும் பெருத்த மகிழ்ச்சியில் உள்ளனர்.