

நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் வரும் 19-ம்தேதி ஆயுதபூஜை கொண்டாடப்பட உள்ளது.
ஆயுதபூஜை பண்டிகையையொட்டி, வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் கருவிகள், இயந்திரங்கள், வாகனங்கள் உள்ளிட்டவற்றைச் சுத்தம் செய்து வழிபாடு நடத்துவது வழக்கம். மேலும், கல்வி உபகரணங்கள் மற்றும் தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் கருவிகளை வைத்து சிறப்பு பூஜைகளும் நடத்தப்படுகின்றன.
இதற்காக அவல், பொரி, பழங்கள், பூக்கள், வாழைக்கன்று, தோரணம், பூசணிக்காய் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களும், வியாபாரிகளும் வாங்குவது வழக்கம். இதனால் பண்டிகைக் காலத்தில் இந்தப் பொருட்களின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி பண்டிகைகளை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு பூக்கடை மற்றும், காய் மற்றும் கனி சந்தையில் பொதுமக்கள் மற்றும் சில்லறை வியாபாரிகளின் வருகை பெருமளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பண்டிகை காலங்களில் பூக்கள், பூசணிக்காய், எலுமிச்சை, வாழைக்கன்று, வாழை இலை, பழங்கள், மாவிலை மற்றும் பொரி ஆகியவற்றின் தேவை மிக அதிகமாக இருக்கும்.
இதனை முன்னிட்டு கோயம்பேடு சந்தை நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் நவராத்திரி மற்றும் ஆயுதபூஜை சமயத்தில், சிறப்பு சந்தை திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், வரும் அக்டோபர் 19-ம் தேதி ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ள நிலையில், பொதுமக்களின் வசதிக்காக கோயம்பேட்டில் சிறப்பு சந்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆயுதபூஜை முன்னிட்டு அவல், பொரி, வாழைக்கன்று, தோரணம், பூசணிக்காய் உள்ளிட்ட பூஜைப் பொருட்கள் விற்பனை செய்தற்காகவே ஆண்டுதோறும் இந்த சிறப்பு சந்தை அமைக்கப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த ஆண்டுகளை போல் இந்தாண்டும், நவராத்திரி மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று (அக்டோபர் 14-ம்தேதி) முதல் அக்டோபர் 23-ந்தேதி வரை 10 நாட்கள் சிறப்பு சந்தை செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த 10 நாள் கால அவகாசம், பண்டிகைக்கு முந்தைய நாள் பொருட்களை வாங்க வேண்டிய கட்டாயத்திற்குப் பதிலாக, நுகர்வோர் தங்கள் பண்டிகைக்கால ஷாப்பிங்கை முடிக்க கூடுதல் நேரத்தை வழங்கும்.
கோயம்பேடு சந்தை மேலாண்மைக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தச் சந்தை, உணவு தானியச் சந்தையில் உள்ள 15 ஏக்கர் வாகன நிறுத்துமிடத்தில் அமையவுள்ளது. பண்டிகைக்குத் தேவையான பொருட்களை பொதுமக்களும் மற்றும் வியாபாரிகளும் ஒரே இடத்தில் வாங்கிச் செல்லும் வகையில் இந்தச் சந்தை நடத்தப்படுகிறது.
இங்கு பூஜை பொருட்கள் ஒரே இடத்தில் குறைந்த விலையில் கிடைக்கும் என்பதால், வரும் நாட்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், சிறு வியாபாரிகளும் சிறப்பு சந்தையில் குவிவார்கள்.
மேலும் புறநகரில் உள்ள பல்வேறு பெரிய தொழில் நிறுவனத்தினரும் நேரடியாக கோயம்பேட்டுக்கு வந்து அதிக அளவில் ஆயுதபூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்வார்கள்.
அந்தவகையில் ஆயுதபூஜை நெருங்குவதால் கோயம்பேடு சந்தைக்கு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பு சந்தை நடத்தப்படும் இடம் குறித்த விவரங்கள்:
இடம்: கோயம்பேடு உணவு தானிய அங்காடியின் வாகன நிறுத்துமிடம்.
காலக்கட்டம்: இன்று (அக்டோபர் 14) முதல் அக்டோபர் 23-ந்தேதி வரை.
சந்தை இயங்கும் நேரம்: கோயம்பேடு மார்க்கெட் பகுதி வழக்கமான மொத்த மற்றும் சில்லறை விற்பனை நேரங்களின்படி (காலை முதல் இரவு வரை) இந்த சிறப்பு சந்தையும் செயல்படுகிறது.
சந்தைக்கு வருவோருக்கு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை, அங்காடி நிர்வாகக் குழு ஏற்பாடு செய்துள்ளது. வாகன நெரிசலை தவிர்க்கவும், போக்குவரத்தைச் சீரமைக்கவும், அங்காடி நிர்வாகக் குழு அலுவலர்கள், சுழற்சி முறையில் பணியில் ஈடுபட உள்ளனர்.